

ராணிப்பேட்டை,
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கரிக்கந்தாங்கலை சேர்ந்தவர் பழனி இவரது மகன் அருண்குமார் ( 23), மற்றும் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நரேஷ் (25). இன்று காலை அருண்குமார் செய்யாறிலிருந்து ஆற்காடு நோக்கி லாரியை ஓட்டி வந்தார். இதனை போல் நரேஷ் ஆற்காட்டில் இருந்து செய்யாறு நோக்கி லாரியை ஓட்டி வந்தார். ஆற்காடு அடுத்த கலவை கூட்ரோடு, முள்ளுவாடி அருகே வந்தபோது கட்டுபாட்டினை இழந்த 2 லாரிகளும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டது.
இந்த விபத்தில் 2 லாரிகளின் முன்பகுதி நொறுங்கியது. டிரைவர்கள் 2 பேரும் லாரிகளின் இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். அப்பகுதி மக்கள் இதுகுறித்து கலவை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ராணிப்பேட்டை டி.எஸ்.பி கனகராஜ், கலவை இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொக்லைன் எந்திரம் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் லாரிகளை தனித்தனியாக பிரித்தனர்.
லாரி டிரைவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.