

சென்னை,
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அன்பில் மகேஸ் பொய்யாமொழியை, உதயநிதி ஸ்டாலின் சந்தித்துள்ளார்.
கடந்த தி.மு.க. ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஸ் பொய்யாமொழி இருந்தார். அந்த காலக்கட்டத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டி.டி.சி.பி., சி.எம்.டி.ஏ., அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாக கூறி, ரூ.100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவரும், தி.மு.க. பிரமுகருமான பி.டி.அரசகுமார் உள்பட பலருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர். இதில் பி.டி.அரசகுமார், அவரது உறவினர்களான ஆரோக்கியராஜ் (39 வயது), சுரேஷ் (49 வயது) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கின் வேகம் சூடுபிடித்தது.
மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ.வும். தி.மு.க. பிரமுகருமான முத்துகுமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இதனிடையே அன்பில் மகேஸ் வீடு உள்ளிட்ட இடங்களில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில், அன்பில் மகேஸ் முதலில் மனு தாக்கல் செய்தார். பின்னர், வழக்கில் முன்ஜாமீன் கேட்டு, மற்றொரு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுக்களை நீதிபதி வி.லட்சுமி நாராயணன் விசாரித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அன்பில் மகேசுக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டார்.
முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் நேற்று மாலையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அன்பில் மகேசை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். சுமார் 4 மணி நேரம் விசாரணைக்கு பிறகு, இரவு 8 மணியளவில் மருத்துவப் பரிசோதனைக்காக அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பின்னர் சென்னை மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நேற்று இரவு 10 மணிக்கு அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நவம்பர் 6-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அன்பில் மகேஸ் நேற்று நள்ளிரவில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்துள்ளார். உதயநிதி ஸ்டாலினுடன் சேகர்பாபுவும் மத்திய புழல் சிறைக்கு வருகை தந்தார்.