உதயநிதி ஸ்டாலின் நிச்சயமாக முதல்-அமைச்சர் ஆவார்: அமைச்சர் ரகுபதி

திமுகவின் வேரை அமித்ஷாவால் கண்டுபிடிக்க கூட முடியாது என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
புதுக்கோட்டை,
நெல்லையில் நேற்று முன்தினம் நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்ற மத்திய மந்திரி அமித்ஷா, வருகிற தேர்தலில் திமுக அரசை வேரோடு அகற்றுவோம் என பேசியிருந்தார். இதுகுறித்து புதுக்கோட்டையில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
கடந்த காலங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லை, அதனால் அவர் முதல்-அமைச்சர் ஆக முடியாது என்றனர். அதனை தவிடுபொடியாக்கி முதல்-அமைச்சரானவர் மு.க.ஸ்டாலின். அதேபோல மு.க.ஸ்டாலினை தொடர்ந்து தமிழ்நாடு முதல்-அமைச்சராக இன்றைய துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிச்சயமாக வருவார். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
திமுகவின் வேரை அசைத்துக்கூட பார்க்க முடியாது. அந்த வேர் எங்கே இருக்கிறது என்று கூட தெரியாது. திமுகவின் வேர் ஆழமாக பாய்ந்திருக்கிறது. எனவே திமுகவின் வேரை அமித்ஷாவால் கண்டுபிடிக்க கூட முடியாது. பிரதமர், முதல்-அமைச்சர்கள், அமைச்சர்கள் யாரும் 30 நாட்கள் சிறையில் இருந்தால் பதவி பறிக்கப்படும் என சட்டம் கொண்டு வருவது நிறைவேறாது. அப்படி நிறைவேறினாலும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து முறியடித்து காண்பிக்கப்படும்.
வாக்கு சதவீத அடிப்படையில் அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்ற அமித்ஷாவின் கணக்கிற்கு நாங்கள் பதில் சொல்ல முடியாது. தமிழகத்தின் நிலவரம் அமித்ஷாவுக்கு தெரியவே தெரியாது. அகில இந்திய நிலவரம் வேறு, தமிழகத்தின் நிலவரம் வேறு என்பதை நிரூபிக்கும் வகையில், 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மீண்டும் பாடம் புகட்டுவோம். இவ்வாறு அவர் கூறினார்.






