

சென்னை,
உகாதி திருநாளையொட்டி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது;
”தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் உறவுகளின் புத்தாண்டான உகாதி திருநாளைக் கொண்டாடும் சகோதர, சகோதரிகளுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தெலுங்கு பேசும் மக்களும், கன்னட மொழி பேசும் மக்களும் தமிழர்களிடமிருந்து மொழியால் வேறுபட்டு இருந்தாலும் சிந்தனையால் ஒன்றுபட்டவர்கள்; உடலால் வேறுபட்டாலும் உயிரால் ஒன்றுபட்டவர்கள். தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களை தமிழக மக்கள் தங்களின் சகோதரர்களாகவே பார்க்கின்றனர். தமிழகத்தின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் காலம் காலமாகவே பெருமளவில் பங்களித்துள்ளனர்.
புத்தாண்டுகள் எப்போதும் புதிய மகிழ்ச்சியையும், உறவையும், நன்மைகளையும் கொண்டு வருபவை. அந்த வகையில் தமிழர்களுக்கும், தெலுங்கு மற்றும் கன்னட மக்களுக்கும் இடையிலான ஒற்றுமையும், சகோதரத்துவமும் ஆல்போல் தழைத்தோங்க வேண்டும். மொத்தத்தில் உகாதி, அனைவருக்கும் அனைத்து நலன்களையும், வளங்களையும் வழங்க வேண்டும். அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி, அமைதி, சகோதரத்துவம், இன்பம், வளமை, நிம்மதி உள்ளிட்ட அனைத்தும் நிறைய வேண்டும் என்று கூறி வாழ்த்துகிறேன்.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.