

தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள 23 சுங்கச் சாவடிகளில் வரும் செப்டம்பர் 1-ந்தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படவிருப்பதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறைந்தபட்சம் 8 சதவீத கட்டணம் உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது.ஆண்டுக்கு ஆண்டு கட்டண உயர்வு செய்யப்படுவது மக்கள் மீது நடத்தப்படும் பொருளாதாரத் தாக்குதல். இதை ஏற்கவே முடியாது. தாம்பரம் - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் வசூலிக்கப்பட்ட சுங்கக் கட்டணத்தில் 63 சதவீத தொகை பராமரிப்பு மற்றும் இயக்கச் செலவுகளுக்காக ஒதுக்கப்பட்டு விட்டதாகவும், மற்றொருபுறம் பணவீக்கம் காரணமாக முதலீட்டுத் தொகை அதிகரித்து விட்டதாகவும் கூறியுள்ள தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், முதலீட்டை எடுக்க இன்னும் பல ஆண்டுகள் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்று தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி எழுப்பப்பட்ட கேள்விக்கு விடையளித்துள்ளது.
இது முழுக்க முழுக்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கூறியுள்ள காரணம் தான். இதில் எந்தவிதமான வெளிப்படைத் தன்மையும் இல்லை. மக்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதில் வெளிப்படைத் தன்மை அவசியமாகும். தமிழ்நாட்டிலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்க ஆன செலவு, அவற்றில் இருந்து வசூலிக்கப் பட்ட கட்டணம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட வேண்டும். அதுவரை சுங்கக்கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.