மது போதையில் வாகன விபத்தில் இறப்பு ஏற்படுத்தினால் 10 ஆண்டுகள் வரை சிறை: நெல்லை காவல்துறை தகவல்

திருநெல்வேலி மாவட்டத்தில் மது போதையில் வாகனம் ஓட்டி இறப்பு ஏற்படுத்திய 8 வழக்குகள், கொலையாகாத மரணம் விளைவித்த குற்றமாக மாற்றப்பட்டுள்ளன.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
திருநெல்வேலி, வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சிவக்குமார் நேற்று முன்தினம் (23.9.2025, செவ்வாய்கிழமை) இரவு, தனது இருசக்கர வாகனத்தில், ஜங்ஷன், மீனாட்சிபுரத்தை சேர்ந்த சுப்பையா (வயது 47) என்பவருடன், திருநெல்வேலி–- சங்கரன்கோவில் சாலையில் செல்லும்போது, சங்கரன்கோவிலைச் சேர்ந்த லாரன்ஸ்(52) என்பவர் காரால் மோதி காயத்தினை ஏற்படுத்திவிட்டு சம்பவ இடத்தில் நிற்காமல் சென்று விட்டார். இந்த விபத்தில் காயமடைந்த சுப்பையா உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த நிலையில், மறுநாள் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து, மானூர் காவல் நிலையத்தில் வாகன விபத்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட புலன் விசாரணையில், விபத்து ஏற்படுத்தியவர் அந்த நேரத்தில் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து மேற்சொன்ன வழக்கானது, கொலையாகாத மரணம் விளைவிக்கின்ற குற்றம் பிரிவில் மாற்றப்பட்டது. பின்னர் விபத்து ஏற்படுத்தியவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
குடிபோதையில் வாகனம் ஓட்டுவோர், தங்களின் செயலால், பிறர் உயிருக்கும் உடலுக்கும் தீங்கு ஏற்படும் என்பதனை நன்கு அறிந்தே, அப்படி செய்கிறார்கள். இதற்கு அஜாக்கிரதை குற்றம் என்று மட்டும் சாதாரணமாக நடவடிக்கை எடுக்காமல், கொலையாகாத மரணம் விளைவிக்கின்ற குற்ற பிரிவில் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. அதேபோல் குடிபோதையில் வாகனம் ஓட்டி பிறருக்கு காயம் ஏற்படுத்தும் சம்பவங்கள், கொலையாகாத மரணம் விளைவிக்கின்ற முயற்சி வழக்காக மாற்றி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்த ஆண்டில் மட்டும் இதுவரை, குடிபோதையில் வாகனங்களை ஓட்டி இறப்பு ஏற்படுத்திய 8 வழக்குகள், கொலையாகாத மரணம் விளைவித்த குற்றமாக மாற்றப்பட்டுள்ளன; இதற்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம். மேலும் 16 விபத்து காயம் சம்பவங்கள் கொலையாகாத மரணம் விளைவிக்கின்ற முயற்சி வழக்காக மாற்றப்பட்டுள்ளன; இதற்கு அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.
மது போதையில் வாகனம் ஓட்டுவது சமூகத்திற்கு எதிரான, பிறர் உயிருக்கும் உடலுக்கும் ஆபத்து ஏற்படுத்தும் கொடிய செயலாகும். பொதுமக்கள் தங்கள் உயிருக்கும், பிறரின் உயிரின் பாதுகாப்பிற்கும், மது போதையில் வாகனம் ஓட்டாமல் சட்டப்படி பொறுப்புடன் நடக்குமாறு திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் கேட்டுக்கொண்டார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






