ஈரான் போர் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்; மோடி கண்டனம் தெரிவிக்காதது ஏன்? -மு.வீரபாண்டியன் கேள்வி

இந்திய அரசின் அழைப்பின் பேரில்தான் ஐஆர்ஐஎஸ் டேனா என்ற பெயருடைய அந்தக் கப்பல்  இந்தியாவில், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சர்வதேச கடற்படை பயிற்சியில் கலந்து கொண்டது.
ஈரான் போர் கப்பல் மீது 
அமெரிக்கா தாக்குதல்; மோடி கண்டனம் தெரிவிக்காதது ஏன்? -மு.வீரபாண்டியன் கேள்வி
Published on

சென்னை,

இந்தியாவின் அழைப்பின் பேரில் பயிற்சிக்காக வந்து திரும்பிக் கொண்டிருந்த ஈரான் போர் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல். மத்திய மோடி அரசு, கண்டனம் செய்யாமல் மௌனம் காப்பது கண்டனத்திற்குரியது. இது குறித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையாவது:-

இரண்டு நாட்களுக்கு முன்பு, இலங்கை அருகில் இந்தியப் பெருங்கடலில் ஈரான் கடற்படை கப்பல் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கப்பட்டு மூழ்கிய சம்பவம் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கோழைத்தனமான இச்செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்திய அரசின் அழைப்பின் பேரில்தான் ஐஆர்ஐஎஸ் டேனா என்ற பெயருடைய அந்தக் கப்பல்  இந்தியாவில், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சர்வதேச கடற்படை பயிற்சியில் கலந்து கொண்டது. அதன் பின் தனது நாட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் அக்கப்பல் மீது அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல் ‘டார்பிடோ’ தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் பொருளாதார மண்டலத்தில் இக்கப்பல் தாக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடந்ததும் ஈரான் கப்பல் கடலில் மூழ்கியது. கப்பலில் இருந்த சுமார் 140 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காணாமல் போயுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. சிலரை இலங்கை கடற்படை உயிருடன் மீட்டுள்ளது. அவர்கள் அனைவரும் இலங்கை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நமது நாட்டின் அழைப்பின் பேரில் இந்தியா வருகை தந்து, திரும்பிக் கொண்டிருந்த கப்பல் மீது, அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை இந்திய அரசு கண்டிக்காததை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. உடனடியாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இந்த அத்துமீறிய செயலை கண்டிக்க வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய மோடி அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com