அரசு பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

சென்னையில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 2026-27 கல்வியாண்டின் தொடக்க விழா இன்று நடைபெற்றது.
ராஜ்மோகன்
Published on

சென்னை,

தலைமை ஆசிரியர் உள்பட அரசு பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் உறுதி அளித்தார்.

கூடுதல் கட்டணம்

சென்னை அரும்பாக்கம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 2026-27 கல்வியாண்டின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் ராஜ்மோகன் கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடைகள் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினார். தொடர்ந்து, 21 டிஜிட்டல் திறன் பலகைகளை (ஸ்மார்ட் போர்டுகள்) அவர் தொடங்கி வைத்தார். மேலும், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தார். முன்னதாக தலைவர்கள் வேடமணிந்து வந்திருந்த மாணவ-மாணவிகள் அமைச்சர் ராஜ்மோகனை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து அமைச்சர் ராஜ்மோகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் எங்கள் ஆட்சியிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். தனியார் பள்ளிகள் தாங்கள் வசூலிக்கும் கட்டண விவரங்களை கட்டாயம் தங்களது இணையதள பக்கத்தில் வெளியிட வேண்டும். கடந்த காலங்களில் ஏதாவது காரியம் நடக்க வேண்டும் என்பதற்காக 3-வது நபர்கள் மூலம் லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழல் தனியார் பள்ளிகளுக்கு ஏற்பட்டு இருக்கலாம். ஆனால், எங்களுடைய ஆட்சியில் அரசியல் தலையீடு, லஞ்சம் போன்றவை இருக்காது. எனவே, தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயித்த கட்டணங்களை தாண்டி பெற்றோர்களிடம் கூடுதல் கட்டணம் கேட்க கூடாது.

போதைப்பொருள் பழக்கத்தை...

மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க உரிய கணக்கெடுப்பு நடத்தி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது உள்நோக்கத்தோடு போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும். அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர் உள்பட அனைத்து காலி பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும். அனைத்து அரசு பள்ளிகளிலும் படிப்படியாக ஸ்மார்ட் போர்டுகள் கொண்டு வரப்படும்.அரசு பள்ளிகளில் போதைப்பொருள் பழக்கத்தை அடியோடு ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். காலை உணவு திட்டம், உபகரணங்கள் வாங்குவது, டெண்டர் விடுவது உள்ளிட்டவற்றில் முறைகேடு நடந்தால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தரமோகன், பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், பள்ளியின் தலைமை ஆசிரியை ஸ்ரீபிரியா மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com