

வடலூர்,
கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியில் இன்று 'சௌமியா' என்ற தனியார் பேருந்து விருத்தாச்சலம் நோக்கி சென்று கொண்டிருந்த போது, அதன் டீசல் டேங்க் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதையடுத்து பேருந்து முழுவதும் தீப்பற்றி எரிந்து முற்றிலும் சேதமடைந்தது.
வழக்கம்போல் பயணிகளுடன் பயணித்துக் கொண்டிருந்த பேருந்தில் ஏற்பட்ட இந்த திடீர் விபத்தால் அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவானது. இருப்பினும், தீ வேகமாக பரவத் தொடங்கிய சில நொடிகளுக்குள் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அவசரமாக கீழே இறக்கப்பட்டனர்.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நடுரோட்டில் பேருந்து கொழுந்துவிட்டு எரிந்த சம்பவத்தால் அருகில் இருந்த ஐந்து கடைகள் மற்றும் ஆறு இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.