மருத்துவமனைகளில் சேவையின் தரம், அவசர சிகிச்சை வசதிகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் - வானதி சீனிவாசன்

மருத்துவச் சிகிச்சையில் அலட்சியம் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டால், அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
வானதி சீனிவாசன்
கோப்புப்படம்
Published on: 

சென்னை,

மருத்துவமனைகளில் மருத்துவச் சேவையின் தரம், அவசர சிகிச்சை வசதிகள் மற்றும் மருத்துவர்களின் பொறுப்புணர்வு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

கோவை தெலுங்குபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று பிரசவத்திற்காக மருத்துவமனைக்குச் சென்ற கர்ப்பிணிப் பெண் உயிரிழந்ததாக வெளியாகியுள்ள செய்தி மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. ஒரு குடும்பத்தின் நம்பிக்கையாக இருந்த தாயின் உயிரும், உலகைக் காண வேண்டிய குழந்தையின் உயிரும் பறிபோனதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் சாதாரணமான ஒன்றல்ல.

மருத்துவம் என்பது உயிரைக் காக்கும் உன்னதமான சேவை. ஆனால், மருத்துவச் சிகிச்சையில் அலட்சியம் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டிருந்தால், அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே, இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத் துறையும் உடனடியாகத் தலையிட்டு, நேர்மையான விசாரணை நடத்த வேண்டும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், விசாரணையின் அடிப்படையில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடும் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட வேண்டும்.

இனி இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நிகழாமல் இருக்க அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் மருத்துவச் சேவையின் தரம், அவசர சிகிச்சை வசதிகள் மற்றும் மருத்துவர்களின் பொறுப்புணர்வு உறுதிப்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com