

புதுடெல்லி,
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் பொறுப்பிலிருந்து தமிழகத்தைச் சேர்ந்த வானதி சீனிவாசன் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ரூப் குமாரி சவுத்ரி புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வானதி சீனிவாசன், கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவராக முதன்முதலில் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து இரண்டு முறை அந்தப் பொறுப்பை வகித்து வந்த அவர், சுமார் 6 ஆண்டுகள் தேசிய அளவில் மகளிர் அணியை வழிநடத்திய நிலையில் தற்போது அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
வானதி சீனிவாசனுக்குப் பதிலாக மகளிர் அணியின் புதிய தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ரூப் குமாரி சவுத்ரி, சத்தீஸ்கர் மாநிலத்தின் மகாசமுந்த் நாடாளுமன்றத் தொகுதியின் தற்போதைய பாஜாக எம்.பி ஆவார். இதற்கு முன்பு அவர் சத்தீஸ்கர் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராகவும், அம்மாநில அரசின் நாடாளுமன்றச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.