

சென்னை,
திருச்சியை சேர்ந்தவர் வெல்லமண்டி நடராஜன். அதிமுகவை சேர்ந்த இவர் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அதேவேளை அதிமுக பிளவு ஏற்பட்டபோது இவர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு மாறினார். இதனால் அதிமுகவில் இருந்து வெல்லமண்டி நடராஜன் நீக்கப்பட்டார். பின்னர், ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அதிமுக உரிமை மீட்பு குழுவில் பணியாற்றி வந்தார்.
இதனிடையே, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று திமுகவில் இணைந்தார். இதனால், ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களும் திமுகவில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திமுகவில் சேரும் எண்ணமில்லை என்று வெல்லமண்டி நடராஜன் ஏற்கனவே திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வெல்லமண்டி நடராஜன் இன்று மீண்டும் அதிமுகவில் இணைந்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்த வெல்லமண்டி நடராஜன் அதிமுகவில் இணைந்தார்.