

வேலூர்,
மேற்கு வங்காளத்தில் இருந்து கள்ளநோட்டுகளை எடுத்து வந்து வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் புழக்கத்தில் விட்ட 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் ரபீக்அகமது (வயது 46). இவர் தரணம்பேட்டை பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு ரபீக்அகமது ஆன்லைனில் பொருள் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். பின்னர் பொருளை வாங்கும்போது, அதனை கொடுக்க வந்தவரிடம் ரபீக் அகமது இரண்டு 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்துள்ளார். அந்த ரூபாய் நோட்டின் மீது சந்தேகம் ஏற்பட்டதால் டெலிவரி கொடுத்த நபர் குடியாத்தம் போலீசாருக்கு ரகசியமாக தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து ரபீக்அகமதுவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவரிடம் இருந்து ரூ.50 ஆயிரம் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் குடியாத்தம் பகுதியில் வசிக்கும் ஜூபேர்அகமது(52) என்பவரிடம் கள்ளநோட்டுகளை வாங்கியதாக தெரிவித்தார். அதன்பேரில் ஜூபேர்அகமதுவை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த ரூ.20 ஆயிரம் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆம்பூர் கோபால்(47), பேரணாம்பட்டு காமராஜ்(48) ஆகியோர் கைது செய்யப்பட்டு ரூ.50 ஆயிரம் கள்ளநோட்டுகள் கைப்பற்றப்பட்டன.
தொடர் விசாரணையில், ஆம்பூரைச் சேர்ந்த பாபு(65) என்பவர்தான் கள்ளநோட்டுகளை சப்ளை செய்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ.30 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. பாபு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு வங்காளத்தில் கள்ளநோட்டு வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றவர் என்பதும், அங்கிருந்து கள்ளநோட்டுகளைக் கொண்டுவந்து புழக்கத்தில் விட்டதும் விசாரணையில் அம்பலமானது.
இந்த வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 5 பேரிடம் இருந்தும் மொத்தம் ரூ.1½ லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகளைப் போலீசார் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.