அதி கனமழை எச்சரிக்கை: உதகையில் இன்று சுற்றுலா தளங்கள் மூடல்


அதி கனமழை எச்சரிக்கை: உதகையில் இன்று சுற்றுலா தளங்கள் மூடல்
x
தினத்தந்தி 26 May 2025 6:27 AM IST (Updated: 26 May 2025 9:55 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் கடும் குளிர் நிலவுகிறது.

நீலகிரி

நீலகிரி,

நீலகிரியில் நேற்று முன்தினம் முதல் பல இடங்களில் கனமழை பெய்தது. நேற்று 2-வது நாளாக ஊட்டி உள்பட பல இடங்களிலும் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக அவலாஞ்சியில் 21 சென்டி மீட்டர் மழை பதிவானது.

குன்னூர் கம்பி சோலை, கேத்தி, தலைக்குந்தா, தலையாட்டு மந்து, ஊட்டி படகு இல்லம் பகுதி, கோத்தகிரி உள்பட நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் உடனடியாக மரங்களை வெட்டி அகற்றி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். நீலகிரியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் இன்றும் (திங்கட்கிழமை) அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுத்துள்ளது. அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தொட்டபெட்டா காட்சி முனை, பைன்பாரஸ்ட், அவலாஞ்சி, பைக்காரா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் முன்கூட்டியே மூடப்பட்டன. இதனால் ஏற்கனவே அறை முன்பதிவு செய்து வந்திருந்த சுற்றுலா பயணிகள், சுற்றுலா தலங்களுக்கு செல்ல முடியாமல் தங்கும் விடுதிகளில் இருந்தனர்.

இதற்கிடையே மலர் கண்காட்சியின் கடைசி நாளான நேற்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்தது. அதி கனமழை காரணமாக நீலகிரியில் இன்றும் (திங்கட்கிழமை) வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள், ஊட்டி படகு இல்லம் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.

1 More update

Next Story