'வெற்றிப் பயணம்' திட்டத்தை எதிர்த்து வழக்கு - ஐகோர்ட்டில் இன்று விசாரணை

வெற்றிப் பயண திட்டத்தை எதிர்த்து தனியார் பேருந்து உரிமையாளர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை ஐகோர்ட்டு
கோப்புப்படம்
Published on: 

சென்னை,

அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் 'வெற்றிப் பயணம்' திட்டத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வெற்றிப் பயணம்

தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட விடியல் பயண திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, வெற்றிப் பயண திட்டம் என்ற பெயரில் கடந்த 2-ந்தேதி முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். த.வெ.க. தலைமையில் ஆட்சி அமைந்தபின், மாநிலம் முழுவதும் 12,600-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் செய்ய வகை செய்யும், வெற்றிப் பயண திட்டத்தை எதிர்த்து ஈரோட்டைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர் கலாமணி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

ரூ.6 ஆயிரம் கோடி

அந்த மனுவில், வெற்றிப் பயண திட்டம் காரணமாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் இழப்பை சந்தித்து, தொழிலை கைவிட வேண்டிய சூழல் உருவாகும். பெண் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்காமல் இருப்பது அரசியல் சட்டத்தின் சம உரிமையை மீறும் செயலாகும். வெற்றிப் பயண திட்ட பயனாளிகளுக்கான கட்டணமாக, ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடி அரசே ஏற்றுக் கொண்ட நிலையில், இதேபோல இழப்பீடு வழங்கி, தனியார் பேருந்துகளுக்கு இந்த திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். இதுகுறித்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையை அரசு ஏற்கவில்லை.

இன்று விசாரணை

சட்டசபையில் முதல்-அமைச்சரின் அறிவிப்பு அடிப்படையில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் தொடர்பாக அரசாணை எதுவும் இதுவரை பிறப்பிக்கப்படவில்லை. எனவே, இந்த திட்டத்தை அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும். இந்த வழக்கு முடியும் வரை, வெற்றிப் பயண திட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் முன்பு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com