

சென்னை,
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிர் காக்கும் மருந்தாக ரெம்டெசிவிர் மருந்து மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்டு நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, இதனை கள்ளச்சந்தையில் சிலர் விற்பனை செய்து வருவதாக புகார்கள் எழுந்தன.
இது குறித்து குடிமைப்பொருள் வழங்கல் துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று குடிமைப்பொருள் வழங்கல் துறையின் எஸ்.பி. சாந்தி தலைமயில், தனிப்படை போலீசார் தாம்பரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது தாம்பரத்தைச் சேர்ந்த மருத்துவர் இம்ரான் கான் என்பவரது வாகனத்தில் 17 ரெம்டெசிவர் மருந்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 4 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இந்த மருந்தை 6 ஆயிரம் ரூபாய்க்கு கள்ளச்சந்தையில் வாங்கி, அதனை நோயாளிகளுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ரெம்டெசிவர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வந்த மருத்துவர் இம்ரான் கான் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு தாம்பரம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அங்கு அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனையில் கம்பவுண்டராக வேளை பார்த்து வரும் விக்னேஷ் என்பவர் இந்த ரெம்டெசிவர் மருந்தை இவர்களிடம் கொடுத்தது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து திருவண்ணாமலைக்கு விரைந்த தாம்பரம் போலீசார், கம்பவுண்டர் விக்னேஷை அதிரடியாக கைது செய்தனர். ரெம்டெசிவிர் மருந்தை வாங்குவதற்காக மக்கள் மருத்துவமனைகளில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வேளையில், அரசு மருத்துவமனையில் கம்பவுண்டராக வேளை செய்த நபர் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்க முயற்சி செய்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.