ரூ.1,200 கோடியில் புதிய தலைமை செயலகம் : சென்னையில் 3 இடங்கள் தேர்வு?

புதிய தலைமை செயலகம் கட்ட சென்னையில் மூன்று இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரூ.1,200 கோடியில் புதிய தலைமை செயலகம் விஜய் அறிவிப்பு
புதிய தலைமை செயலகம்
Published on

சென்னையில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் இன்று பேரவை விதி 110 -ன் கீழ் அறிவித்துள்ள நிலையில், இதற்காக சென்னையில் மூன்று இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக அரசு அடையாளம்

இந்த மூன்று இடங்களில் இறுதியாக முடிவு செய்யப்படும் இடத்தை இம்மாத நடுப்பகுதிக்குள் அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம், பட்டினப்பாக்கத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் உருவாக்கப்பட்ட குடியிருப்புப் பகுதி, நந்தம்பாக்கத்தில் தற்போது செயல்படாத இந்தியன் டிரக்ஸ் அண்ட் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் இருந்த இடம். இந்த மூன்று இடங்களையே தமிழக அரசு அடையாளம் கண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஒவ்வொரு இடமும் அதற்கே உரிய சாதக, பாதகங்களைக் கொண்டுள்ளன. கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம் பகுதியானது, ஆளுநர் மாளிகையான லோக் பவனுக்கு எதிரே உள்ளது. இங்கு அகலமான சர்தார் படேல் சாலை உள்ளது. எனவே, எளிதில் செல்வதற்கு ஏற்ற இடமாக இது கருதப்படுகிறது.

ஜெயலலிதா அடிக்கல் நாட்டிய இடம்

இந்த பகுதியில்தான் 43 ஏக்கர் பரப்பளவில் தலைமைச் செயலகம் கட்ட முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2003-ல் அடிக்கல் நாட்டினார். எனினும், இதன் அருகில்தான் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு ஏராளமான மாணவர்கள் பயின்று வரும் நிலையில், இடத்தைத் தேர்வு செய்வதற்கு முன்பாக கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயமாக இது கருதப்படுகிறது.

பட்டினப்பாக்கம், நந்தம்பாக்கம்

பட்டினப்பாக்கத்தைப் பொறுத்தவரை இப்பகுதிக்கு அகலமான சாலை வசதி இல்லை. அதோடு, நகரின் முக்கிய பகுதிகளான மயிலாப்பூர் மற்றும் அடையாறுக்கு அருகில் உள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

மேலும் இந்தப் பகுதி முதல்-அமைச்சர் விஜய்யின் இல்லம் மற்றும் தவெக தலைமை அலுவலகம் அமைந்துள்ள பனையூரில் இருந்து தற்போதைய தலைமைச் செயலகம் செல்லும் தூரத்தை விட குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், நந்தம்பாக்கத்தில் இந்தியன் டிரக்ஸ் அண்ட் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் செயல்பட்டு வந்த சுமார் 62 ஏக்கர் நிலம் தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலத்தின் ஒரு பகுதியில் சென்னை வர்த்தக மையம் அமைக்கப்பட்டது. எஞ்சியுள்ள இடம் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான பரிசீலனையில் உள்ளது. நந்தம்பாக்கத்துக்கு மெட்ரோ ரெயில் சேவைகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இடத்தை இறுதி செய்வதற்கு முன்பாக, அதன் சாதக, பாதகங்கள் குறித்து ஆராயப்பட்டு முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com