மன்னிக்க முடியாத அளவுக்கு ஊழல் மலிந்த திமுக அரசு - விஜய் கடும் தாக்கு

தி.மு.க. அரசை, வருகிற தேர்தலில் தூக்கி எறிந்து விசிலடித்துக் கொண்டாட மக்கள் காத்திருப்பதாக விஜய் தெரிவித்துள்ளார்.
மன்னிக்க முடியாத அளவுக்கு ஊழல் மலிந்த திமுக அரசு - விஜய் கடும் தாக்கு
Published on

சென்னை,

தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

கபட நாடகத் தி.மு.க. அரசின் நகராட்சித் துறை அமைச்சரின் ரூ.1020 கோடி ஊழலை அமலாக்கத் துறை எப்போதோ வெளிக்கொண்டு வந்தது. அப்போதே சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது வழக்கு தொடுக்கவும் சொன்னது. ஆனால், ஊழலின் ஊற்றுக்கண்ணை விசாலப்படுத்திக்கொண்டே செல்வதில் இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு கைதேர்ந்தது. ஆகவே, அமலாக்கத் துறை தந்த ஊழலுக்கான ஆதாரங்களைக் கண்டுகொள்ளவே இல்லை.

2026 தேர்தலில் வெல்லவே முடியாது என்று தெரிந்தும் தேர்தலுக்காக ஏதாவது தில்லுமுல்லுகளையும் கூட்டணிக்காகத் தகிடுதத்தங்களையும் தாராளமாகவும் ஏராளமாகவும் செய்வதில் மட்டுமே முனைப்பாக இருக்கும் தி.மு.க. அரசின் உச்சியைப் பிடித்து உயர்நீதிமன்றம் உலுக்கியுள்ளது.

நகராட்சித் துறை அமைச்சரின் ஊழல் குறித்து அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுகளுக்காகத் தந்துள்ள ஆதாரங்களில் முகாந்திரம் உள்ளது. எனவே, உடனடியாக அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஊழல் மலிந்த மு.க.ஸ்டாலினின் அரசுக்கு நேர்ந்து வரும் துடைக்கவே முடியாத ஆகப் பெரிய அவமானங்களில் இதுவும் ஒன்று. இதுவரை தனது அரசின் ஊழல்களுக்குப் பரிகாரமே தேடாத தி.மு.க. அரசு, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி உள்ள நகராட்சித் துறை அமைச்சரைத் தானாகவே ராஜினாமா செய்யச் சொல்ல வேண்டும். இல்லையேல் அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

ஏற்கெனவே டாஸ்மாக்கில் 1000 கோடி அளவிலான ஊழல். இப்போது நகராட்சித் துறையில் 1020 கோடி ஊழல். அமலாக்கத் துறை அவிழ்த்துவிடும் தி.மு.க. அரசின் ஊழல்கள் எல்லாமே ஆயிரக்கணக்கான கோடிகளிலேயே உள்ளன. மன்னிக்க முடியாத அளவிற்கு ஊழல் மலிந்த தி.மு.க. அரசை, வருகிற தேர்தலில் தூக்கி எறிந்து விசிலடித்துக் கொண்டாட மக்கள் காத்திருக்கின்றனர்.”

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com