சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக விஜய் ஆலோசனை... தவெக எம்.எல்.ஏ.க்களை ஈ.சி.ஆரில் தங்கவைக்க ஏற்பாடு

த.வெ.க. வேட்பாளர்களின் வெற்றி செய்தியை கேட்டு, விஜய் உற்சாகம் அடைந்தார்.
சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக விஜய் ஆலோசனை... தவெக எம்.எல்.ஏ.க்களை ஈ.சி.ஆரில் தங்கவைக்க ஏற்பாடு
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று காலை வெளியானது. நொடிக்கு, நொடி தேர்தல் முடிவுகள் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆரம்பம் முதலே த.வெ.க. முன்னிலை வகித்தது. நேரம் செல்ல, செல்ல த.வெ.க. வெற்றி உறுதி செய்யப்பட் டது.

108 தொகுதிகளில் முன்னிலை பெற்று, த.வெ.க. தனிபெரும் கட்சியாக உருவெடுத்தது. த.வெ.க.வின் வெற்றியை தமிழகம் முழுவதும் த.வெ.க.வினர் வெடி, வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடி மகிழ்ந்தனர்.

பெரம்பூர், திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளிலும் விஜய் வெற்றி வாகை சூடினார். தமிழகம் முழுவதும் த.வெ.க. வேட்பாளர்களின் வெற்றி செய்தியை கேட்டு, விஜய் உற்சாகம் அடைந்தார். வெற்றி பெற்றவர்கள் உடனடியாக பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று போன் மூலம் விஜய் அறிவுறுத்தினார். அதனை ஏற்று தேர்தலில் வெற்றி பெற்ற த.வெ.க. வேட்பாளர்கள் சென்னை விரைந்தனர்.

இந்த நிலையில், நீலாங்கரை உள்ள வீட்டில் இருந்து புறப்பட்டு பனையூர் அலுவலகம் சென்ற விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் வளாகத்தில் உள்ள தவெக கொள்கை தலைவர்கள் சிலைகளுக்கு விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் வெற்றி பெற்ற வேட்பாளர்களை நேரில் சந்தித்து விஜய் பாராட்டினார்.

தொடர்ந்து தவெக எம்.எல்.ஏ.க்களுடன் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். பெரும்பான்மைக்கான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு பெறுவது குறித்து தவெக நிர்வாகிகளுடன் 1 மணி நேரத்திற்கு மேல் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் விஜய் சட்டசபை த.வெ.க. குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இதற்கான கடிதத்தில் த.வெ.க. வேட்பாளர்கள் கையெழுத்திடுகின்றனர்.

மேலும் சென்னை வந்துள்ள தவெக எம்.எல்.ஏ.க்களை ஈ.சி.ஆரில் உள்ள ஒரு ரிசார்ட்டில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பிற கட்சிகளின் ஆதரவை நாட திட்டமிடப்பட்டுள்ளது. இன்றோ அல்லது நாளையோ கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கக்கோரி விஜய் கடிதம் அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com