சட்டப்படி விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதிப்பு - சென்னை ஐகோர்ட்டில் வருமானவரித்துறை தகவல்

வருமானத்தை மறைத்ததாக ரூ.1.50 கோடி அபராதம் செலுத்தும்படி வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சட்டப்படி விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதிப்பு - சென்னை ஐகோர்ட்டில் வருமானவரித்துறை தகவல்
Published on

சென்னை,

கடந்த 2016-17ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகர் விஜய் தாக்கல் செய்த போது, அந்த ஆண்டிற்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார். அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித் துறை, நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015-ம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்தது. அதன்படி, புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என கண்டறிந்தது. வருமானத்தை மறைத்ததற்கான ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்து கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. இந்தநிலையில், இது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வருமான வரிச் சட்டப்படி விஜய்-க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என ஐகோர்ட்டில் வருமான வரித்துறை வாதத்தை முன் வைத்தது.

2019-ல் பிறப்பிக்க வேண்டிய உத்தரவை 2022-ல் பிறப்பித்துள்ளதால் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என விஜய் தரப்பில் வாதன் முன் வைக்கப்பட்டது. இதனையடுத்து சட்டப்படி விஜய்-க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதால் அவரது வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இதேபோன்ற வழக்கில் பிறப்பித்த உத்தரவு நகலை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது சென்னை ஐகோர்ட்டு.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com