கதறி அழுத ஜீவாவை கட்டி அணைத்து ஆறுதல் கூறிய விஜய்

சினிமா தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி உடலுக்கு த.வெ.க. தலைவர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
கதறி அழுத ஜீவாவை கட்டி அணைத்து ஆறுதல் கூறிய விஜய்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான ஆர்.பி.சவுத்ரி, ராஜஸ்தானில் நடந்த கார் விபத்தில் நேற்று முன்தினம் பலியானார். அவருக்கு வயது 72. இதற்கிடையில் அவரது உடல் விமானம் மூலம் சென்னை மயிலாப்பூரில் உள்ள இல்லத்துக்கு நேற்று கொண்டுவரப்பட்டது. ஆர்.பி.சவுத்ரியின் உடலை பார்த்து அவரது மனைவியும், மகன்கள் ஜீவா, ஜித்தன் ரமேஷ் உள்ளிட்டோரும் கண்ணீர்விட்டு அழுதனர்.

ஆர்.பி.சவுத்ரி உடலுக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு ஜீவா, ஜித்தன் ரமேஷ் ஆகியோரை கட்டிப்பிடித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது ஜீவா, விஜயை கட்டிப்பிடித்தவாறு கதறி அழுதார். பின்னர் விஜய் அவரை தேற்றினார்.

விஜய் நடித்த 'பூவே உனக் காக', 'லவ் டுடே', 'துள்ளாத மனமும் துள்ளும்', 'ஷாஜகான்', 'திருப்பாச்சி', 'ஜில்லா' போன்ற படங்களை ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளன.

அதேபோல முன்னணி நடிகர்களான சிவகுமார், மம்முட்டி, ராதாரவி. பார்த்திபன், விக்ரம், சூர்யா, தனுஷ், விஷால், கார்த்தி, சிபிராஜ், உதயா, நகுல், இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், விக்ரமன், ஆர்.வி.உதயகுமார், ராஜகுமாரன், பேரரசு, ராஜூமுருகன், நாஞ்சில் பி.சி.அன்பழகன், ராஜேஷ் எம்.செல்வா, நடிகைகள் மீனா, கீர்த்தி சுரேஷ், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ் எம்.பி. உள்பட பலரும் அஞ்சலி செலுத்தினர். ஆர்.பி.சவுத்ரியின் உடல் இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

அதனைத்தொடர்ந்து இறுதிச்சடங்கு நடத்தப்பட்டு, கிருஷ்ணாம்பேட்டை இடுகாட்டில் ஆர்.பி.சவுத்ரியின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. ஆர்.பி.சவுத்ரியின் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com