

தமிழக முதல் அமைச்சர் விஜய் இன்று காங்கிரஸ் மூத்த தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இதையடுத்து, விஜயை வரவேற்கும் வகையில் பேனர்களும் வைக்கப்பட்டிருந்தன.
காலை 10 மணியளவில் இந்த சந்திப்பு நடைபெறும் என கூறப்பட்ட நிலையில், திடீரென சோனியா காந்தி - விஜய் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. எனினும், நேற்று இரவே இந்த சந்திப்பு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சந்திப்பு ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை. இதற்கிடையில், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை விஜய் அடுத்த வாரம் சந்திக்கும் வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் வட்டார தகவல்களை மேற்கோள் காட்டி பிரபல ஆங்கில தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியுடன் தவெக கூட்டணி அமைத்து ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், காங்கிரஸ் தலைவர்களை விஜய் சந்திக்க இருப்பதாக வெளியான தகவல் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்தது. ஆனால், காங்கிரஸ் தலைவர்களுடனான இந்த சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டிருப்பது அக்கட்சி தொண்டர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.