புத்தாண்டையொட்டி தொண்டர்களை சந்தித்தார் விஜயகாந்த்

தே.மு.தி.க. அலுவலகத்தில் புத்தாண்டையொட்டி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை விஜயகாந்த் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
புத்தாண்டையொட்டி தொண்டர்களை சந்தித்தார் விஜயகாந்த்
Published on

கட்சி அலுவலகம் வந்தார்

ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு தினத்தில் தே.மு.தி.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் நேரில் சந்தித்து வாழ்த்துகள் தெரிவிப்பது வழக்கம். இந்தநிலையில் உடல்நலக்குறைவு மற்றும் கொரோனா காலகட்டம் போன்ற காரணங்களால் கடந்த 2 ஆண்டுகளாக நிர்வாகிகள்-தொண்டர்களை விஜயகாந்த் சந்திக்க முடியவில்லை.

இந்தநிலையில் புத்தாண்டு தினத்தையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வெள்ளை நிற உடையில் விஜயகாந்த் நேற்று காலை வந்தார். அவரது மனைவியும், கட்சியின் பொருளாளருமான பிரேமலதா, மகன் விஜயபிரபாகரன் உள்ளிட்டோரும் வந்தனர். அப்போது திரண்டிருந்த நிர்வாகிகள்-தொண்டர்களும் கேப்டன் வாழ்க... கேப்டன் வாழ்க... என்று உற்சாக குரல் எழுப்பினர்.

தொண்டர்கள் உற்சாகம்

பின்னர் கட்சி அலுவலக கூட்டரங்கில் விஜயகாந்த் அமர்ந்து கொண்டார். அவரை சற்று தள்ளி நின்றபடி நிர்வாகிகள், தொண்டர்கள் பார்த்துவிட்டு சென்றனர். ஒமைக்ரான் அச்சம் காரணமாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிர்வாகிகள்-தொண்டர்கள் ஆர்வமாக விஜயகாந்தை பார்த்து புத்தாண்டு வாழ்த்து கூறி சென்றனர். சிலர் நீ வந்துட்ட தலைவா... அது போதும் என உற்சாகத்தில் சிலிர்த்துவிட்டு சென்றனர்.

அதேவேளை புத்தாண்டு பரிசாக, வந்தவர்களுக்கு தலா 100 ரூபாய் நோட்டை பிரேமலதா வழங்கினார்.

இனிப்புகள்

ஏறக்குறைய 1 மணி நேரத்துக்கு பிறகு விஜயகாந்த் அங்கிருந்து புறப்பட்டார். புத்தாண்டையொட்டி தொண்டர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கட்சியின் அவைத்தலைவர் இளங்கோவன், கொள்கை பரப்பு செயலாளர் மோகன்ராஜ், துணை செயலாளர் பார்த்தசாரதி உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

முன்னதாக பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தே.மு.தி.க. பலவீனமானதா?

மழை வெள்ளத்தால் சென்னை ஸ்தம்பித்து போயிருக்கிறது. தமிழகத்தை கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருவது தி.மு.க., அ.தி.மு.க. தான். தமிழகத்தில் நடைபெறும் அவலங்களுக்கு இந்த 2 கட்சிகளுமே பொறுப்பு. எனவே வழக்கம்போல முந்தைய ஆட்சியாளர்கள் மீது பழிபோடாமல், மக்களுக்கு என்ன வேண்டுமோ அதை செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தே.மு.தி.க. பலவீனமாக உள்ளது என்று சிலர் சொல்கிறார்கள். அது தவறு. கேள்வி கேட்பவர்கள்தான் பலவீனமாக இருக்கிறார்கள். எங்கள் கட்சி என்றும் பலமாகவே இருக்கிறது. அது பார்ப்பவர்கள் கண்ணோட்டத்தை பொறுத்தது. 10 வருடம் ஆட்சி செய்வதவர்களே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பயப்படுகிறார்கள். பண பலம், ஆட்சி பலம் தான் தேர்தல் என்ற நிலையை கொண்டுவந்திருக்கிறார்கள். பல சவால்களை கடந்துதான் தேர்தல் களத்தில் நிற்கிறோம். நிச்சயம் ஜெயிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com