

விழுப்புரம்
விழுப்புரம் புதிய பஸ் நிலையம்
தென் தமிழகத்தை இணைக்கும் மிக முக்கியமான நகரமாக விழுப்புரம் நகரம் விளங்கி வருகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி போன்ற மாநகராட்சிகளில் உள்ள பஸ் நிலையங்களுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய பஸ் நிலையமாக விழுப்புரம் புதிய பஸ் நிலையம் உள்ளது.
இங்கிருந்து சென்னை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கோவை, சேலம், ஈரோடு, வேலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் 24 மணி நேரமும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்த பஸ் நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதுவும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் திருவிழா கூட்டம்போல் பயணிகள் கூட்டம் அலைமோதும்.
நடைபாதை ஆக்கிரமிப்பு
இத்தகைய பஸ் நிலையத்தில் சில கடை வியாபாரிகள், பயணிகள் நடந்து செல்லும் நடைபாதையையும், அவர்கள் இருக்கக்கூடிய பகுதிகளையும் ஆக்கிரமித்து கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருவதால் பொதுமக்கள், நடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டு கொண்டிருக்கின்றனர்.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் சென்றாலும் நகராட்சி அதிகாரிகள், பெயரளவுக்கு மட்டும் வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவதும், அவர்கள் சென்ற சில மணி நேரங்களிலேயே மீண்டும் ஆக்கிரமித்துக்கொள்வதும் தொடர் கதையாக நிகழ்ந்து வருகிறது. இதனால் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை என்பது வெறும் கண் துடைப்பாகவே இருந்து வருகிறது. இந்த ஆக்கிரமிப்புகள் காரணமாக பயணிகளுக்கும், கடை ஊழியர்களுக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்படுகிறது.
பார்க்கிங் இடமாக...
அதுமட்டுமின்றி பஸ் நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்த இடவசதி இருக்கின்றபோதிலும் பலர் அங்கு கட்டணம் அதிகம் வசூலிப்பதாக கூறிவிட்டு அனந்தபுரம், கெடார், பண்ருட்டி, பில்லூர், காரணைபெரிச்சானூர், முகையூர், சித்தாமூர் உள்ளிட்ட பல்வேறு கிராமப்புறங்களுக்கு செல்லக்கூடிய அரசு டவுன் பஸ்கள் வந்து செல்லும் இடங்களில் இருசக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். ஏற்கனவே அங்குள்ள கடை வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலையில் அந்த ஆக்கிரமிப்புக்கு மேல் ஆக்கிரமிப்பாக வாகனங்களையும் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதேபோல் புறக்காவல் நிலையம் அருகிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகிறது.
இதனால் புறக்காவல் நிலைய பகுதியும், அரசு டவுன் பஸ்கள் நிற்கும் இடம் அமைந்துள்ள பகுதியும் வாகனங்கள் நிறுத்தும் பகுதியாகவே மாறியுள்ளதால் பயணிகள் நடந்து செல்லக்கூட முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி பஸ் நிலைய நடைபாதைகளிலும் பலர் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். ஏற்கனவே நடைபாதைகளில் பயணிகள் அமருவதற்கு போதிய இருக்கை வசதிகள் செய்து கொடுக்கப்படாத நிலையில் தரையில் அமரக்கூட இடமில்லாமல் இருசக்கர வாகனங்களை நிறுத்தி இடையூறு செய்து வருகின்றனர்.
நடவடிக்கை எடுக்கப்படுமா?
எனவே விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமின்றி மீண்டும் ஆக்கிரமிப்புகள் உருவாகாமல் இருக்க நகராட்சி அதிகாரிகள் தினந்தோறும் கண்காணிப்பதை உறுதி செய்ய வேண்டும். அதுபோல் பயணிகளுக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை காவல்துறையினர் அப்புறப்படுத்த வேண்டுமென்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபற்றி விழுப்புரம் அருகே தெளி கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வனத்தையன் கூறும்போது, இங்குள்ள பஸ் நிலையத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் இங்கு குடிநீர் வசதி இல்லை. கிராமப்புறங்களுக்கு அடிக்கடி பஸ் வசதி இல்லாததால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. அவ்வாறு இருக்க நடைபாதைகளில் பயணிகள் அமருவதற்கு போதிய இருக்கை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. இருக்கின்ற இடத்திலும் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு செல்கின்றனர். ஏதோ நெடுஞ்சாலையில் செல்வதுபோன்று நடைபாதைகளிலேயே இருசக்கர வாகனங்களை ஓட்டிக்கொண்டு செல்கின்றனர். இதையெல்லாம் போலீசாரும் கண்டுகொள்வதில்லை. என்றார்.
பண்ருட்டியை சேர்ந்த மங்கவரம் கூறுகையில், நான் விழுப்புரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துவிட்டு மீண்டும் பண்ருட்டி செல்ல பஸ்சிற்காக காத்திருக்கிறேன். இங்கு போதிய இருக்கை வசதி இல்லாததால் தரையில்தான் அமர வேண்டியுள்ளது. இங்குள்ள இடமும் சுகாதாரமற்ற முறையில் இருக்கின்ற நிலையில் என்னால் வெகுநேரம் நின்றுகொண்டிருக்க முடியாது என்பதால் வேறு வழியின்றி தரையில் அமர்ந்துள்ளேன். இவற்றையெல்லாம் யாரிடம் போய் சொல்வது என்றும் தெரியவில்லை என்றார்.