விழுப்புரம்: காருடன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், ஆலம்பூண்டி கிராமத்தில் காருடன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, நிதியுதவி வழங்க உத்தரவிட்டு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், ஆலம்பூண்டி கிராமத்தில் நேற்று (3.3.2026) காலை சுமார் 8.30 மணியளவில் புதுவை கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலை அருகிலுள்ள தனியாருக்குச் சொந்தமான கிணற்றில் விழுந்து மூழ்கியது.
இதில் காரில் பயணம் செய்த சென்னை, கெருகம்பாக்கத்தைச் சேர்ந்த மணி மகன் ராஜா (வயது 44), சேகர் மகன் வினோத்(39), கொளப்பாக்கம் காந்தி தெருவைச் சேர்ந்த ஆதிகேசவன் மகன் ஜெயமுருகன்(43) மற்றும் மௌலிவாக்கம், பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த குமார் மகன் சேகர்(27) ஆகிய 4 நபர்கள் கிணற்று நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
இந்த விபத்தில் உயிரிழந்த 4 நபர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

