விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை: நீலகிரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை: நீலகிரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
Published on

கூடலூர்,

வார விடுமுறை, விநாயகர் சதுர்த்தியையொட்டி 3 நாட்கள் தொடர் விடுமுறை வந்துள்ளது. இதையொட்டி நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். இதனால் சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து வந்தன.

தொடர் விடுமுறை

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்னதாக வார இறுதி நாட்களும் வந்ததால் நேற்று முதல் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை நாட்கள் ஆனது. இதனால் பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகாவில் இருந்தும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் நேற்று முன்தினம் இரவு முதலே கார்கள், வேன்கள் மற்றும் சொகுசு பஸ்களில் நீலகிரி நோக்கி வர தொடங்கினர்.

போக்குவரத்து நெரிசல்

இதன் காரணமாக குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் வாகன நெரிசல் அதிகரித்தது. குறிப்பாக ஊட்டி நகரின் மையப்பகுதியான சேரிங்கிராஸ், ஏரிச்சாலை, தாவரவியல் பூங்கா மற்றும் படகு இல்ல சாலை ஆகிய இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சுற்றுலா வாகனங்கள் அனைத்தும் மிக மெதுவாக, ஊர்ந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டன. முக்கிய சந்திப்புகளில் ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் ஆமை வேகத்தில் ஊர்ந்தபடி சென்றன. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

தற்காலிக போக்குவரத்து மாற்றம்

சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதால், போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நெரிசலை கட்டுப்படுத்த முக்கிய இடங்களில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு, தற்காலிக போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டு வருகின்றன. கர்நாடகா மற்றும் கேரளத்தில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மசினகுடி வழியாக கல்லட்டி மலைப்பாதையில் செல்வதற்கு கோர்ட்டு உத்தரவுபடி 200 வாகனங்களை மட்டும் வனத்துறையினர் மாவனல்லாவில் புதிதாக அமைத்த சோதனைச்சாவடி வழியாக அனுமதித்தனர். அதன்பின்னர் மற்ற வாகனங்களை கூடலூர் வழியாக செல்லும்படி திருப்பி அனுப்பினர். இதனால் வெளிமாநில சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com