

சென்னை,
தமிழகத்தில் வரவிருக்கும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் அதையொட்டி வரும் தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டு, ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டிருந்த பொதுமக்கள் இந்தத் திடீர் கட்டண உயர்வு காரணமாக கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பிற மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்திற்காகவும், கல்வி மற்றும் பணிக்காகவும் தங்கி வசிக்கின்றனர். இவர்கள் தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி போன்ற முக்கிய பண்டிகை காலங்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருவது வழக்கம்.
வழக்கமாக வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் சற்று உயர்வது வழக்கம் என்றாலும், இந்த முறை நிலவரம் எல்லை மீறியுள்ளது. ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செயலிகளில் சென்னை டூ நாகர்கோவில் வழித்தடத்திற்கான ஸ்லீப்பர் கட்டணம் வழக்கமான நாட்களை விட 3 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது. வழக்கமாக 1,200 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை வசூலிக்கப்படும் இந்த வழித்தடத்தில், தற்போது ஒரு இருக்கையின் விலை ரூ.4,000 முதல் ரூ.5,000 வரை உயர்ந்துள்ளது.
பண்டிகை காலங்களில் ஆம்னி பஸ்களில் கட்டணம் சற்று அதிகமாக இருப்பது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், இந்த முறை அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளையும் மீறி கட்டணத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். சென்னையில் இருந்து நாகர்கோவில் வரும் பயணிகளுக்காக வருகிற செப்டம்பர் மாதம் 12 மற்றும் 13-ந்தேதிகளில் கட்டணம் மிக அதிக அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, விடுமுறை நாளான செப்டம்பர் 13-ந்தேதி அன்று சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் படுக்கை வசதி கொண்ட ஆம்னி பேருந்துகளில் ஒரு இருக்கைக்கு தலா ரூ.5,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சொந்த ஊருக்கு செல்வதற்கு மட்டுமின்றி, மீண்டும் சென்னை திரும்புவதற்கும் ஆம்னி பஸ்கள் கட்டண உயர்வு . நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு திரும்புவதற்காக செப்டம்பர் 14 மற்றும் 15-ந்தேதிகளில் ஆம்னி பஸ்களில் ரூ.4,000 முதல் ரூ.5,000 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
தொடர் விடுமுறையை தவறவிடாமல் சொந்த ஊரில் உள்ள தங்களது குடும்பத்தினருடன் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில், ரெயில்களில் டிக்கெட் கிடைக்காத நடுத்தர மக்கள், வேறு வழியின்றி இந்த கூடுதல் கட்டணத்தை செலுத்தி முன்பதிவு செய்து வருகின்றனர்.
தொடர் விடுமுறையை பயன்படுத்தி சொந்த ஊரில் உள்ள குடும்பத்தினருடன் பண்டிகையை கொண்டாட நினைத்தால், ஆம்னி பஸ் நிறுவனங்கள் ரெயில்களில் டிக்கெட் கிடைக்காததை சாதகமாக்கி கொண்டு இவ்வாறு கட்டணத்தை உயர்த்துவது அநியாயம்" என்று பயணிகள் கடும் வேதனை தெரிவித்துள்ளனர்.
பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளின் இந்த கட்டண உயர்வை தடுத்து நிறுத்த போக்குவரத்து துறை அதிகாரிகள் உடனடியாக சோதனைகளை நடத்த வேண்டும் என்றும், கூடுதல் அரசுச் சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.