

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்பட்ட 9 கனரக லாரிகளுக்கு போக்குவரத்து போலீசார் ரூ.45 ஆயிரம் அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாநகரில் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கனரக லாரிகள் நகருக்குள் செல்வதற்கு குறிப்பிட்ட நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த நேரக் கட்டுப்பாட்டை மீறி செல்லும் வாகனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி மாவட்டக் எஸ்.பி. சிவபிரசாத் உத்தரவிட்டார்.
எஸ்.பி. உத்தரவின் பேரில், தூத்துக்குடி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுனைமுருகன் தலைமையிலான போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இந்த தணிக்கையின்போது, நேரக் கட்டுப்பாட்டை மீறி நகருக்குள் இயக்கப்பட்ட 9 கனரக லாரிகள் பிடிக்கப்பட்டன. மேலும் அந்த வாகனங்களின் ஓட்டுநர்களிடம் இருந்து மொத்தம் ரூ.45 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. நேரக் கட்டுப்பாட்டை மீறி இயக்கப்படும் கனரக வாகனங்கள் மீது தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.