

சென்னை,
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த ஆண்டு ஜூன் 23-ந் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தல் தொடர்பாக நடிகர் சங்க முன்னாள் தலைவர் விஷால் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, தேர்தலை நடத்தலாம் என்றும், ஆனால் பதிவான ஓட்டுகளை எண்ணக்கூடாது என்றும் இடைக்கால உத்தரவை பிறப்பித்து, வழக்கை தள்ளிவைத்தது.
இந்தநிலையில், இந்த தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்றும், தேர்தலை ரத்து செய்யவேண்டும் என்றும், சங்கத்தின் உறுப்பினர் ஏழுமலை, பெஞ்சமின் உள்பட பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை எல்லாம் விசாரித்த நீதிபதி கே.கல்யாணசுந்தரம், நடிகர் சங்க தேர்தல் சட்டப்படி நடைபெறாததால், தேர்தலை ரத்து செய்வதாக கடந்த மாதம் 24-ந்தேதி தீர்ப்பு அளித்தார். மேலும் அந்த தீர்ப்பில், நடிகர் சங்கத்துக்கு, விதிகளை பின்பற்றி மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்றும், இந்த தேர்தலை நடத்தும் அதிகாரியாக ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி பி.கோகுல்தாசை நியமிப்பதாகவும் கூறி இருந்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நடிகர் விஷால் மேல்முறையீடு செய்து உள்ளார்.
இதுதொடர்பாக தாக்கல் செய்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-
நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலம் முடிவடைந்து 3 ஆண்டுகளுக்கு பின்னர் நடத்திய தேர்தல் செல்லாது என்று தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஆனால், தமிழகத்தில் பல சங்கங்களுக்கு தேர்தலே நடத்தாமல், பழைய நிர்வாகிகளே அன்றாட நிர்வாகபணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் நடிகர் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழுவை கூட்டி, அதில் பெரும்பான்மையினரின் முடிவுக்கு ஏற்பத்தான் தேர்தல் நடத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டது. அதன்படி சுமார் ரூ.35 லட்சம் செலவு செய்து, தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.
எனவே, தேர்தலை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். நடந்து முடிந்த தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணி, முடிவுகளை வெளியிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.