விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு - கமல்ஹாசன்

விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு என்று நடிகரும், மக்கள்நீதிமய்யம் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு - கமல்ஹாசன்
Published on

சென்னை,

மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் இன்று அதிகாலை காலமானார்.

நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று காலை சாலிகிராமத்தில் உள்ள அவரின் வீட்டில் இருந்தபோது அவருக்கு லேசாக நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தார் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகத்தில் வீட்டிலிருந்து வடபழனி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதய சிகிச்சை நிபுணர்கள் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் ரத்த நாள அடைப்பைக் கண்டறியும் ஆஞ்சியோ சிகிச்சையும், இதயச் செயல்பாட்டை அதிகரிக்க, இயல்பு நிலைக்குக் கொண்டுவர எக்மோ சிகிச்சை அளிக்கப்பபட்டது. இந்நிலையில் இன்று காலை 5 மணி அளவில் மீண்டும் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டது, மருத்துவர்கள் தீவிரமாக முயன்றும், அவரைக் காப்பாற்ற முடியவில்லை.

நடிகர் விவேக்கின் திடீர் மரணம் திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தற்போது அவரின் உடல் விருகம்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு நண்பர்கள், திரைத்துறை பிரபலங்கள், நடிகர், நடிகைகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் விவேக் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு என்று நடிகரும், மக்கள்நீதிமய்யம் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், நடிகனின் கடமை நடிப்பதோடு முடிந்தது என்று இருந்துவிடாமல் தனக்குச் செய்த சமூகத்துக்கு தானும் ஏதேனும் செய்ய விரும்பியவர், செய்தவர் நண்பர் விவேக். மேதகு கலாமின் இளவலாக, பசுமைக் காவலராக வலம் வந்த விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு என்று கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com