பாலியல் சீண்டலில் ஈடுபட்ட த.வெ.க. நிர்வாகி.. கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை

ஆலந்தூரில் பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து பாலியல் தொல்லை கொடுத்த த.வெ.க. நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாலியல் சீண்டலில் ஈடுபட்ட த.வெ.க. நிர்வாகி.. கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை
Published on

சென்னை,

சென்னை பரங்கிமலையில் கணவரை இழந்த பெண் ஒருவரிடம், ஆலந்துார் வடக்கு பகுதி த.வெ.க., செயலர் வேம்புலி என்பவர், அவ்வப்போது பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அப்பெண் புகார் அளித்ததை அடுத்து, பரங்கிமலை போலீசார், பெண்கள் வன்கொடுமை பிரிவில் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக, அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் வேம்புலியை நீக்குவதாக, எம்.எல்.ஏ.,வும் சென்னை புறநகர் த.வெ.க., மாவட்ட செயலருமான சரவணன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை புறநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியின் ஆலந்தூர் வடக்கு பகுதி கழகச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த வேம்புலி அவர்கள், கட்சியின் ஒழுங்கு விதிமுறைகளுக்கு முரணான செயல்பாடுகளில் ஈடுபட்டதாலும் கட்சியின் நற்பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாலும், இன்று (10.06.2026) முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அவர் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளிவிருந்தும் உடனடியாக நீக்கப்படுகிறார்.

எனவே. இனி அவருக்கு தமிழக வெற்றிக் கழகத்துடன் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை அனைத்து நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அறிந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் பெயர், கொடி, சின்னம் மற்றும் நிர்வாகப் பொறுப்புகளை பயன்படுத்தி எந்தவித நடவடிக்கைகளிலும் ஈடுபட அவருக்கு அனுமதி இல்லை அவரால் மேற்கொள்ளப்படும் எந்தவித செயல்பாடுகளுக்கும் கழகம் பொறுப்பேற்காது.

கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் யாரும் அவருடன் கட்சி சார்ந்த எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com