வாக்கு எண்ணிக்கை: நெல்லையில் 5 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக 225 அலுவலர்கள் ஒதுக்கீடு

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணிகளில் ஈடுபடவுள்ள அலுவலர்களை, கணினி குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் முதல்கட்டப் பணிகள் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றன.
வாக்கு எண்ணிக்கை: நெல்லையில் 5 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக 225 அலுவலர்கள் ஒதுக்கீடு
Published on

திருநெல்வேலி,

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணிகளில் ஈடுபடவுள்ள அலுவலர்களை, கணினி குலுக்கல் முறையில் (Randomization) ஒதுக்கீடு செய்யும் முதல்கட்டப் பணிகள் நேற்று திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றன. மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் சுகுமார் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் அரசு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அங்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, கண்காணிப்பு கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மே 4-ம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையையொட்டி செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள்:

வாக்கு எண்ணிக்கை மேஜைகள்: ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 14 மேஜைகள் மற்றும் 3 இருப்பு (Reserve) மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அலுவலர்கள் ஒதுக்கீடு:

ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 17 மேற்பார்வையாளர்கள், 17 உதவியாளர்கள், 17 நுண்பார்வையாளர்கள் என 51 பேர் வீதம், 5 தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 255 அலுவலர்கள் முதல்கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர்.

தபால் வாக்கு எண்ணிக்கை:

தபால் வாக்குகளை எண்ணுவதற்கு ஒவ்வொரு தொகுதிக்கும் 7 மேஜைகள் மற்றும் ஒரு இருப்பு மேஜை அமைக்கப்படவுள்ளது. இதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் 8 நுண்பார்வையாளர்கள், 8 மேற்பார்வையாளர்கள், 8 நிலை-1 உதவியாளர்கள், 8 நிலை-2 உதவியாளர்கள் என 32 பேர் வீதம், 5 தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 160 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஒதுக்கீடு செய்யும் பணியில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அனிதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சுப்பிரமணியன் மற்றும் அனைத்து சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com