நவம்பர் 12-ந் தேதி தொடங்குகிறது வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள்: டிச., 11-ந் தேதி கடைசிநாள்

அடுத்த ஆண்டு (2027) ஜனவரி 4-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 12-ந் தேதி தொடங்குகிறது வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள்
Published on: 

சென்னை,

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நவம்பர் 12-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு தொடங்க உள்ளதாக, தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார்.

சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள்

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தப்பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றன. அதன்படி வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு அதன் அடிப்படையில் கடந்த சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.

அடுத்ததாக, ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் (எஸ்.எஸ்.ஆர்.) தொடங்கப்பட உள்ளன. 1.1.2027 தேதியை வாக்காளராக தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு இந்தப் பணிகள் நடைபெறவுள்ளன.

ஜனவரி 4-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல்

அதன்படி, வாக்குச் சாவடிகளை திருத்தியமைத்தல் மற்றும் மறுசீரமைத்தல் பணிகள் வரும் நவம்பர் 2-ந் தேதி முடியும். ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 12-ந் தேதி வெளியிடப்படும். பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்றவற்றுக்காக டிசம்பர் 11-ந் தேதிவரை விண்ணப்பிக்கலாம். அந்த விண்ணப்பங்கள் மீது டிசம்பர் 28-ந் தேதிக்குள் முடிவு எடுக்கப்படும். அடுத்த ஆண்டு (2027) ஜனவரி 4-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

விண்ணப்பிப்பதற்காக அளிக்கப்பட்ட காலகட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, பெயர் நீக்கம், திருத்தம், இடமாற்றம் செய்ய அதற்கான விண்ணப்பங்களை அளிக்கலாம்.

என்னென்ன சான்றுகள் தேவை..?

அலுவலக வேலை நாட்களில் வாக்குச் சாவடி நிலை அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் விண்ணப்பங்களை அளிக்கலாம். சிறப்பு முகாம் நடத்தப்படும் நாட்களில் அந்தந்த வாக்குச்சாவடி அமைவிடங்களில் விண்ணப்பங்களை அளிக்கலாம். பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பத்துடன், வசிப்பிட முகவரி மற்றும் வயது ஆகியவற்றுக்கான சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

முகவரிச் சான்றாக அங்கீகரிக்கப்பட்ட 7 ஆவணங்களில் ஒன்றின் நகலை அளிக்கலாம்.

அதன்படி, முகவரிச் சான்றாக அங்கீகரிக்கப்பட்ட 7 ஆவணங்களில் ஒன்றின் நகலை அளிக்கலாம்.

* முகவரிக்கான நீர் அல்லது மின்சாரம் அல்லது எரிவாயு இணைப்பு ரசீது (குறைந்தது 1 ஆண்டுக்கானது)

* ஆதார் அட்டை

* வங்கி அல்லது அஞ்சல் அலுவலக கணக்கு புத்தகம்

* இந்திய பாஸ்போர்ட்

* விவசாயி புத்தகம் உள்பட வருவாய்த் துறைகளின் நில உரிமைப் பதிவுகள்

* பதிவு செய்யப்பட்ட வாடகை குத்தகை பத்திரம் (குத்தகைதாரராக இருந்தால்)

* பதிவு செய்யப்பட்ட விற்பனைப்பத்திரம் (சொந்த வீட்டில் வசிப்பவர் என்றால்)

வயதுக்கு 6 சான்றிதழ்கள்

வயதுச் சான்றாக சுய சான்றொப்பமிட்ட 6 ஆவணங்களில் ஒன்றின் நகலை அளிக்கலாம். அதன்படி,

* பிறப்பு சான்றிதழ்

* ஆதார் அட்டை

* பான் அட்டை

* ஓட்டுனர் உரிமம்

* 10-ம் வகுப்பு அல்லது 12-ம் வகுப்பு சான்றிதழ்கள் (அதில் பிறந்த தேதி இருந்தால்)

* இந்திய பாஸ்போர்ட்

பெயர் சேர்க்க படிவம் 6

https://voterportal.eci.gov.in மற்றும் "ECINET" ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 18 வயது பூர்த்தியடைபவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும், பெயர் சேர்க்க படிவம் 6-ல் விண்ணப்பிக்கலாம்.

வெளிநாட்டு இந்தியருக்கு....

வெளிநாட்டில் வாழும் இந்திய குடிமக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட, சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரிடம் படிவம் 6ஏ நேரில் அளிக்கப்பட வேண்டும் அல்லது வாக்காளர் பதிவு அலுவலருக்கு தபாலிலும் படிவத்தை அனுப்பலாம்.

இடமாற்றம் அல்லது வாக்காளரின் விவரங்களில் திருத்தம் செய்ய வேண்டியிருந்தாலோ அல்லது இடம் பெயர்தல், திருத்தம், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை தொலைந்து போதல் ஆகிய காரணங்களுக்காக மாற்று புகைப்பட அடையாள அட்டை பெற வேண்டியிருந்தாலோ படிவம் 8-ல் விண்ணப்பிக்க வேண்டும்.

வாக்குச்சாவடி நிலை முகவர்

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கூட்டங்கள் நடத்தப்பட்டு சட்டப்பூர்வ விதிமுறைகள், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கப்படும். ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் வாக்குச்சாவடி நிலை முகவர்களை (பி.எல்.ஏ.) நியமிக்கும்படி அரசியல் கட்சிகள் ஊக்குவிக்கப்படும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com