தமிழக பொருளாதாரத்தை மீட்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசுக்கு எஸ்டிபிஐ வலியுறுத்தல்

மாநிலத்தின் உரிமைகளை நிலைநாட்டி மத்திய அரசிடமிருந்து கூடுதல் நிதியைக் கேட்டுப் பெற வேண்டிய வரலாற்றுப் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது.
எஸ்டிபிஐ
Published on: 

சென்னை,

தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என தவெக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.

நிதி ஒதுக்கீடு

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொறுப்புத் தலைவர் அச.உமர் பாரூக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசு அண்மையில் வெளியிட்டுள்ள வரிப்பகிர்வில் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ள குறைந்த அளவு நிதி ஒதுக்கீடு கடும் அதிர்ச்சியளிக்கிறது. நாட்டின் நிதிப் பங்களிப்பில் முன்னணி வகிக்கும் தமிழகத்திற்கு வெறும் ரூ.4,466 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பது மாநிலத்தின் வளர்ச்சியைப் பின்னுக்குத் தள்ளும் செயலாகும். விவசாய உற்பத்தி பாதிப்பு, விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் போன்ற சவால்களால் தமிழக மக்கள் பெரும் சிரமங்களைச் சந்தித்து வரும் இக்காலகட்டத்தில், மாநிலத்தின் உரிமைகளை நிலைநாட்டி மத்திய அரசிடமிருந்து கூடுதல் நிதியைக் கேட்டுப் பெற வேண்டிய வரலாற்றுப் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது.

மத்திய அரசுடன் இணக்கமாகச் சென்றால்தான் மாநில நிர்வாகத்தைச் சிறப்பாக நடத்த முடியும் என அமைச்சர்கள் கூறும் நிலையில், 'இணக்கம்' என்ற பெயரில் தமிழ்நாட்டிற்கு உரிமையோடு கிடைக்க வேண்டிய நிதிப் பகிர்வைக் குறைத்துக் கொள்வதை வேடிக்கை பார்க்கக் கூடாது. மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கான நியாயமான நிதியைப் பெற மாநில அரசு எந்தவிதத் தயக்கமுமின்றி உறுதியான அழுத்தத்தை அளிக்க வேண்டும்.

பொருளாதார வளர்ச்சி

அதேசமயம், கடந்த காலங்களில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியைக் கண்டு, இந்தியாவின் முதன்மை மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்ந்த தமிழ்நாடு, தற்போது தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவது மிகுந்த கவலையளிக்கிறது. அண்டை மாநிலங்கள் 14 முதல் 23 சதவீதம் வரை அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வசூலில் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள நிலையில், தமிழ்நாடு வெறும் 3சதவீதம் வளர்ச்சியை மட்டுமே எட்டிப் பின்தங்கியுள்ளது. இது மாநிலத்தில் நிலவிவரும் தீவிர பொருளாதாரத் தேக்கநிலையையே வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.

வலியுறுத்தல்

எனவே, மாநிலத்தின் சுய உற்பத்தியைப் பெருக்கி, அதிகளவில் ஏற்றுமதி செய்வதற்கான தொலைநோக்கு திட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். குறிப்பாக, நமது மாநில பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்ந்து, தற்போது போதிய ஆதரவின்றி நலிவடைந்து வரும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களை (MSME) மீட்டெடுக்கும் வகையில் சிறப்பு நிவாரண உதவிகள், சலுகைக் கடன்கள் மற்றும் கட்டமைப்பு வசதிகளைச் செய்து தர வேண்டும். இத்துறை சார்ந்த தொழில்களை மேம்படுத்துவதன் மூலமே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை மீண்டும் நாட்டின் முதன்மை நிலைக்கு உயா்த்தவும் முடியும் என்பதால், இதற்கான வழிவகைகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

X