

சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை (23.04.2026) நடைபெற உள்ளது. இதையடுத்து மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர். அவர்களில் 3,579 பேர் ஆண்கள், 443 பேர் பெண்கள், ஒருவர் மூன்றாம் பாலினத்தவராகும்.
தமிழகத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை தற்போது 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 ஆகும். அவர்களில் 2 கோடியே 80 லட்சத்து 30 ஆயிரத்து 658 பேர் ஆண்கள், 2 கோடியே 93 லட்சத்து 4 ஆயிரத்து 905 பேர் பெண்கள், 7,728 பேர் மூன்றாம் பாலினத்தவராகும்.
வாக்காளர் பட்டியல் தொடர்பான எஸ்.ஐ.ஆர். பணிகள் நிறைவடைந்த நிலையில், சுமார் 40 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டன. எனவே, ஏற்கனவே வாக்களித்து வருபவர்களே இந்த முறை வாக்களித்தாலும், தமிழகத்தின் வாக்கு சதவீதம் 85-ஐ தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரே கட்டமாக நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “தமிழகம் முழுவதும் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் நட்சத்திர வேட்பாளர்கள், சுயேட்சைகள் என 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் 5.73 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் 2.77 கோடி ஆண் வாக்காளர்கள், 2.89 கோடி பெண் வாக்காளர்கள் உட்பட 5.73 கோடி பேர் வாக்களிக்க தகுதியானவர்கள்.
14.59 லட்சம் பேர் முதல்முறையாக வாக்களிக்க உள்ளனர். வாக்குப்பதிவு மையங்களுக்கள் செல்போன் எடுத்து செல்ல முடியாது. தமிழ்நாடு முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் 5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடி மையங்களில் சிசிடிவி கேமரா அமைத்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் இதுவரை 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகி உள்ளது. 4 கட்டுப்பாட்டு மையங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன.
தேர்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ண 65 வாக்கு எண்ணிக்கை மையங்கள் தயார்நிலையில் உள்ளன. காவல்துறையினர் மட்டுமின்றி 300 கம்பெனி துணை ராணுவப்படையினரும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். தமிழகம் முழுவதும் ரூ.1,262 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள், மதுபானம், பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது” என்று அவர் கூறினார்.
இதனைத்தொடர்ந்து, “அரசியல் கட்சியினர் பணப்பட்டுவாடா செய்வது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அர்ச்சனா பட்நாயக், “எல்லா முயற்சியும் எடுத்துள்ளோம். ஏதும் குறிப்பிட்ட சிக்கல்கள் இருந்தால் நீங்கள் சொல்லலாம் , அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
தொடர்ந்து அவரிடம், “மக்களிடம் இவ்வளவு கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளநிலையில், தேர்தலில் வேட்பாளர்கள் பணப்பட்டுவாடா செய்கிறார்கள். அதை ஏன் பிடிக்கவில்லை. பணப்பட்டுவாடா நடப்பது தெரிந்தும் பறக்கும்படையினர் கண்டுகொள்வதில்லை என கூறப்படுகிறது. மக்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணம் இவ்வளவு (ரூ.1,262 கோடி) என்று கூறினீர்கள். ஆனால் வேட்பாளரிடம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து ஏன் கூறவில்லை..?” என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், “எங்கள் அதிகாரிகள் (பறக்கும்படையினர் / நிலையான கண்காணிப்பு குழுவினர்) எல்லோரும் ரோந்து பணியில் தான் இருக்கிறார்கள். எல்லோரின் முயற்சியும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதனால் தான் இந்த அளவுக்கு பிடிதிருக்கிறோம்” என்று அர்ச்சனா பட்நாயக் கூறினார்.