வீடுகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததா?ஈரோடு வீட்டு வசதி அலுவலகத்தில் பணியாற்றிய 9 பேர் அதிரடி இடமாற்றம்

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஈரோடு அலுவலகத்தில் வீடுகள் ஒதுக்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 9 பேர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
வீடுகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததா?ஈரோடு வீட்டு வசதி அலுவலகத்தில் பணியாற்றிய 9 பேர் அதிரடி இடமாற்றம்
Published on

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஈரோடு அலுவலகத்தில் வீடுகள் ஒதுக்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 9 பேர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

வீட்டுவசதி திட்டம்

தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் வீட்டு மனை, வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் குறைந்த விலை வீடுகள் விற்பனை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ஈரோடு மாவட்ட வீட்டு வசதி பிரிவு மூலம் ஈரோடு முத்தம்பாளையம் பகுதி 1 முதல் 8 வரை, நசியனூர் ரோடு மாணிக்கம்பாளையம், சம்பத்நகர், பெருந்துறை, தாராபுரம், சத்தியமங்கலம், பள்ளிபாளையம் என பல்வேறு இடங்களில் வீட்டு மனைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பல இடங்களில் வீடுகளும் கட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

ஒதுக்கீடு

வீட்டு வசதி வாரியம் மூலம் விற்பனை செய்யப்படும் தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் அல்லது வீட்டு மனைகள் எதுவாக இருப்பினும் வாரியத்தின் அறிவிப்பை தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெற்று குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையிலும் மனைகள், வீடுகள் ஒதுக்கீடு நடைபெறுகிறது.

இவ்வாறு ஒதுக்கீடு பெற்றவர்கள் முழு தொகை மற்றும் ஆவணங்களை செலுத்தியதும், வரைவு பத்திரத்தை வீட்டு வசதி வாரியம் வழங்கும். அதை ஒதுக்கீடுதாரர் முறையாக பத்திரத்தில் பதிவு செய்ய வேண்டும்.

தகராறுகள்

இந்த நடைமுறை சொல்வதற்கு எளிதாக இருந்தாலும், ஈரோடு வீட்டு வசதி வாரியத்தில் இருந்து பத்திரங்கள் பெறுவது என்பது மிகப்பெரிய சிரமத்தை ஏற்படுத்தி வருவதாக பொதுமக்கள் புகார்கள் தெரிவித்து வந்தனர். அலுவலகத்தில் புரோக்கர்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும், கையூட்டு கொடுப்பவர்களுக்கு மட்டுமே பத்திர பதிவுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்ததாகவும் புகார்கள் வந்தன. வேண்டுமென்றே காலம் கடத்தி அபராத தொகை வசூலித்து வருவதாக ஒதுக்கீடு தாரர்கள் அடிக்கடி அலுவலக பணியாளர்களிடம் தகராறுகள் செய்வதும் நடைபெறும்.

சமீபகாலமாக ஈரோடு சம்பத்நகர் வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் முறைகேடுகள் அதிகரித்து வந்ததாக புகார்கள் வந்தன. இந்நிலையில், ஈரோடு வீட்டு வசதி பிரிவு அலுவலகத்தில் பணியாற்றி வந்த கண்காணிப்பாளர் உள்பட 9 பேர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து வீட்டு வசதி வாரிய அலுவலக அதிகாரி ஒருவர் கூறும்போது, 'கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை வீடுகள் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாகவும், மக்களை அலைக்கழித்தாகவும் வந்த புகார்களின் பேரில் 9 பேரும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. அவர்களுக்கு பதில் மாற்று பணியாளர்கள் நியமிக்காததால், எங்களுக்கு கூடுதல் பணி சுமை ஏற்பட்டுள்ளது. ஏராளமான பணிகள் தேங்கி கிடக்கின்றன' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com