

பென்னாகரம்,
தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 3 ஆயி ரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.குறிப்பாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரம், ஒகேனக்கல் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக ஒகேனக்கல்லில் 14.24 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான பிலிகுண்டுலு, ராசிமணல், அஞ்செட்டி, கேரட்டி, நாட்றாம்பாளையம், தக்கட்டி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. இதனிடையே நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
கனமழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
இதன் காரணமாக ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் செந்நிறத்தில் பெருக்கெடுத்து ஓடியது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இதேபோன்று தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரம் அருகே உள்ள போடூர்பள்ளம், கோவில்பள்ளம், சறுக்கல் பாறை, முத்தூர் மலை, பாலக்கோடு,மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் ஒகேனக்கல் கிளை ஆறான சின்னாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த தண்ணீர் ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு பெருக்கெடுத்து ஓடுகிறது.