ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1.35 லட்சம் கன‌அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1.35 லட்சம் கன‌அடியாக அதிகரித்துள்ளது.
Published on

தர்மபுரி,

தென்மேற்கு பருவமழையின் காரணமாக கர்நாடக மற்றும் கேரள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை தீவிரம் காட்டி வருகிறது. இதன் காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டின.

இதைத்தொடர்ந்து இந்த 2 அணைகளில் இருந்தும் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. நேற்று மதியத்திற்கு மேல் வினாடிக்கு 1 லட்சம் கனஅடிக்கும் அதிகமாக தண்ணீர் உபரியாக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், ஒகேனக்கல்லுக்கு இன்று மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 1.35 லட்சம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக ஒகேனக்கல் அருவிகளிலும், காவிரி கரையோரமும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் தீயணைப்பு துறையினர், போலீசார் மற்றும் வருவாய் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com