ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 57 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 3-வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 57 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
Published on

பென்னாகரம்,

கேரள மாநிலம் வயநாடு சுற்றுவட்டார பகுதிகளிலும், கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்த 2 அணைகளும் முழுமையாக நிரம்பி வரும் நிலையில் அணைகளின் பாதுகாப்பு கருதி உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது. அதன்படி கபினி அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 46 ஆயிரம் கனஅடி தண்ணீரும் என மொத்தம் வினாடிக்கு 76 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது.

இந்த தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. அதன்படி நேற்று காலை 10 மணி நிலவரப்படி வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

இந்த நிலையில் நீர்வரத்து மேலும் அதிகரித்தது. நேற்று பிற்பகல் 2 மணி நிலவரப்படி வினாடிக்கு 42 கனஅடியாக அதிகரித்த நிலையில், இரவு 7 மணியளவில் இந்த நீர்வரத்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக கூடியது.

இந்நிலையில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தற்போது மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி வினாடிக்கு 57,000 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருகிறது.

இதனால் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. பாறைகளே தெரியாத அளவுக்கு ஐந்தருவிகளை முழ்கடித்தவாறு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையின் மீது 2 அடி உயரத்திற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நடைபாதைக்கு செல்லும் நுழைவு வாயிலை போலீசார் பூட்டி சீல் வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் 3-வது நாளாக தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து அதிக அளவில் உபரிநீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அளவீடு செய்து கண்காணித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com