மக்கள் தீர்ப்பின்படி விஜய் முதல்-அமைச்சராக பதவியேற்பதுதான் சரி - திருமாவளவன்

விஜய் ஆட்சி அமைக்க கவர்னர் அனுமதிக்க வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
மக்கள் தீர்ப்பின்படி விஜய் முதல்-அமைச்சராக பதவியேற்பதுதான் சரி - திருமாவளவன்
Published on

சென்னை,

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உரிமை கோரி கவர்னரை சந்தித்துள்ளது. பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்பதால் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு த.வெ.க. சார்பில் ஆதரவு கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதில், 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி அதிகாரப்பகிர்வு என்ற நிபந்தனையுடன் த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்துள்ளது.

இதனால், விஜய்க்கு ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பான்மைக்கு இன்னும் 5 இடங்கள் தேவை. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர். இதற்கிடையே, த.வெ.க.வுக்கு ஆதரவு அளிப்பது குறித்து சென்னையில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) அக்கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் உயர்நிலை குழு கூட்டம் நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலை யில், உயர்நிலைக்குழு கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது.

இதுகுறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியும், கம்யூனிஸ்டு கட்சிகளும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் கம்யூனிஸ்டு கட்சியுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில், த.வெ.க.வுக்கு ஆதரவு அளிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து ஆலோசிக்கப்படும். அதன் பின்னர், கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற்று அறிவிப்பு வெளியிடப்படும்' என்றார்.

இந்நிலையில் த.வெ.க. தலைவர் விஜய்யை பதவியேற்க அனுமதிக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “தனிப்பெரும் கட்சியாக த.வெ.க.வை மக்கள் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். எனவே விஜய்யை பதவியேற்க அனுமதிக்க வேண்டும். ஆனால் கவர்னர் இன்னும் முடிவு எடுக்காமல் குழப்பம் உருவாவதற்கு இடம் கொடுக்கிறார். இது ஏற்புடையதல்ல..

118 எம்எல்ஏக்கள் ஆதரவை காண்பித்துவிட்டு பதவியேற்புக்கு வாருங்கள் என கவர்னர் சொல்ல முடியாது. த.வெ.க. தலைவர் விஜய்க்கு பெரும்பான்மை இருக்கிறதா என்பதை சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும். அமித் ஷா விளையாட்டு தமிழகத்தில் அரங்கேறுகிறது. பா.ஜ.க. தலையீட்டை தமிழகத்தில் நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.

மக்கள் தீர்ப்பின் படி விஜய் முதல்-அமைச்சராக பதவியேற்பதுதான் சரி. எங்களுடன் இணைந்து த.வெ.க .ஆட்சியமைக்க விரும்புவதை நாங்கள் பரிசீலிக்கிறோம். ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பது தொடர்பாக விஜய் கடிதம் எழுதினார். போனில் பேசினார்.. ஆலோசித்து முடிவு செய்வோம் என்று கூறியிருக்கிறோம்.” என்று திருமாவளவன் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com