

சென்னை,
திமுக தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
“சோதனைகள் நமக்கென்ன புதிதா? அந்த நெருப்பாறுகளை நீந்திக் கடப்போம் வா" என்று கம்பீரமாய் எழுந்து நிற்கும் கற்கோட்டையான அறிவாலயத்தின் வாயில் தினமும் வரவேற்கிறது. நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் என்னைக் காண வருகின்றனர். அவர்கள் என்னிடம் சொல்வதெல்லாம், "நாங்க இருக்கோம். நாம மீண்டும் வருவோம்!". இந்தச் சொற்கள் போதுமே, எதிரிகளை ஒருசேர வீழ்த்தும் வலிமையைக் கொடுக்க!
காலை அறிவாலயத்தில் உங்களைச் சந்தித்து கருத்துகளைக் கேட்பதும், மாலை தொடங்கி இரவு வரை நீங்கள் பதிவு செய்த கருத்துகளைப் படிப்பது எனவும் அன்றாடம் உங்களின் எண்ணங்களை ஆய்ந்தறிவதையே வழக்கமாகக் கொண்டிருந்தேன்.
உங்களது எண்ணங்களின் அடிப்படையில், கழகத்தின் மறுசீரமைப்பிற்காக, மறுகட்டுமானத்திற்காக, இளமையும் அனுபவமும் கலந்த “மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு”வையும் இப்போது அமைத்திருக்கிறேன்.
கிளை முதல் தலைமை வரை மறுசீரமைப்பு குறித்த பரிந்துரைகளை என்னிடம் வழங்கிட அறிவுறுத்தியுள்ளேன்.
உடன்பிறப்புகளின் உணர்வுகளை உள்வாங்கி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த நூறாண்டுகளுக்கான பயணத்தைத் திட்டமிடும் பணிகளைத் தொடங்கியுள்ள நிலையில், இருவாரப் பயணமாக இன்று அயலகம் செல்கிறேன். அயலகத்தில் இருந்தாலும் அறிவாலயத்தில்தான் என் மனம் இருக்கும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.