

சென்னை,
தமிழகத்தில் எம்.எல்.ஏ.க்களின் தொகுதிப் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ள கார், ஓட்டுநர் உதவியாளர் மற்றும் மாதம் ரூ.75,000 பராமரிப்புத் தொகை வழங்கப்படும் என முதல்-அமைச்சர் விஜய் சமீபத்தில் சட்டபேரவையில் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
நிதிச்சுமையைக் கருத்தில் கொண்டு, பொருளாதாரத்தில் நலிவடைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டுமே இந்தச் சலுகையை வழங்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், அப்போது (2001 முதல் 2016) சட்டமன்ற கூட்டத்தொடரை முன்னிட்டு உறுப்பினர்கள் ரெயிலிலேதான் வந்து சென்றோம் என்று முன்னாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி தெரிவித்தார். இது தொடர்பாக, அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
அநேகமாக, பாண்டியன் எக்ஸ்பிரஸில்தான் தென்மாவட்ட எம்எல்ஏக்கள் நிறைந்திருப்பார்கள். இரண்டாம் வகுப்பு எஸ் 3, எஸ் 4 பெட்டிகளில் அவர்கள் பயணம் செய்வார்கள். அதிகாலையில் அரசுப் பேருந்துகள் எம்எல்ஏக்களுக்காக சென்ட்ரல் மற்றும் எக்மோர் ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டிருக்கும். இரண்டு அல்லது மூன்று பேருந்துகளில் எம்எல்ஏக்கள், அவர்களின் உதவியாளர்கள் அல்லது உறவினர்கள் ஏறிக்கொள்வார்கள். தலைமை செயலக கோட்டைக்குள்ளும் பேருந்தில்தான் செல்வோம்.
ஆளும்கட்சி எதிர்க்கட்சி பாகுபாடில்லாமல் அந்த பேருந்து கலகலப்பாகவே பயணிக்கும். அதன்பிறகு இன்றுவரை ரெயில் நிலையங்களில் எம்எல்ஏக்களை காணமுடியவில்லை... காரணம் சிம்பிள்.அதாவது எளிமை.
ரெயில் விமானமாக பரிணாம வளர்ச்சியை அடைந்திருந்தது.
இவ்வாறு அதில் கூறினார்.