எங்களுக்கு பதவி வேண்டாம்! எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிக்கை-அதிமுகவில் மீண்டும் கலகம்

கழகப் பணியில் எங்களை ஈடுபடுத்திக் கொள்ள இயலாத சூழ்நிலையை நீங்கள் உருவாக்கியுள்ளீர்கள் என்று தெரிவித்துள்ளனர்.
எங்களுக்கு பதவி வேண்டாம்! எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிக்கை-அதிமுகவில் மீண்டும் கலகம்
Published on

சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.சுமார் 60 ஆண்டுகாலம் தமிழகத்தை ஆண்ட தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வுக்கு பதிலாக த.வெ.க. என்னும் புதிய கட்சி ஆட்சி அதிகாரத்தை பிடித்துள்ளது. அதுவும் 70 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக கூட்டணி அரசு அமைந்துள்ளது.

இதில் தி.மு.க.வை பொறுத்தவரை, அந்த கட்சி தலைமையிலான கூட்டணியில் இருந்த காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தற்போது விஜய் தலைமையிலான த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளித்தன.

தனி அணியாக

சமீபத்தில் ம.தி.மு.க.வும் தி.மு.க. கூட்டணியை விட்டு விலகியுள்ளது. தமிழகத்தின் மற்றொரு பிரதான கட்சியான அ.தி.மு.க.வில், தேர்தல் தோல்விக்கு பின்னர் அக்கட்சியின் முன்னணி தலைவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் 25 எம்.எல்.ஏ.க்கள் தனி அணியாக பிரிந்து செயல்பட்டனர். சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர்கள், கட்சி கட்டளையை மீறி த.வெ.க. அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். எனவே அவர்களின் கட்சிப்பதவிகளை பறித்து, கட்சித்தலைமை நடவடிக்கை எடுத்தது. இதனிடையே மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார். இசக்கி சுப்பையா ஆகிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க. வில் இணைந்தனர்.

இதேபோல் முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரும் தனது பத வியை ராஜினாமா செய்துவிட்டு கட்சியில் இருந்து விலகினார். அடுத்த அதிர்ச்சியாக கரூர் எம்.எல்.ஏ. எம்.ஆர்.விஜயபாஸ்கர், நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

கட்சியில் இருந்து விலகல்

இந்த பரபரப்பு அடங்கும் முன், அவர் நேற்று அ.தி.மு.க.வில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். இந்த பரபரப்புக்கு மத்தியில் கட்சிப்பதவி பறிக்கப்பட்ட எஸ்.பி.வேலுமணிக்கு துணைப்பொதுச்செயலாளர் பதவி வழங்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால் அவர் தனக்கு கோவை தெற்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார். அது கிடைக்கவில்லை. அதேநேரம் கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக பொள்ளாச்சி ஜெயராமன் நியமிக்கப்பட்டார். இதனால் அதிருப்தியில் இருந்த எஸ்.பி.வேலுமணி, கட்சித்தலைமைக்கு எதிராக மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளார். இதற்கிடையே, எங்களுக்கு பதவி வேண்டாம் என்று எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர். தாங்கள் நியமித்த பதவிகள் எங்களுக்கு வேண்டாம். நாங்கள் என்றும் கழக உறுப்பினர்களாக இருந்து செயல்படுகிறோம் தாங்கள் வழங்கியுள்ள கட்சி பதவிகளை ஏற்று, கழகப் பணியில் எங்களை ஈடுபடுத்திக் கொள்ள இயலாத சூழ்நிலையை நீங்கள் உருவாக்கியுள்ளீர்கள் என்று எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன், பி.தங்கமணி உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் கூறியுள்ளனர். இதனால் அதிமுகவில் மீண்டும் உள்கட்சி குழப்பம் அதிகரித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com