‘தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் சவுமியாவை தோற்கடிக்க வேண்டும்’ - ராமதாஸ் வெளியிட்ட வீடியோ

அன்புமணி துரோக கும்பலுக்கு யாரும் வாக்களிக்காதீர்கள் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
‘தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் சவுமியாவை தோற்கடிக்க வேண்டும்’ - ராமதாஸ் வெளியிட்ட வீடியோ
Published on

சேலம்

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே கருத்து வேறுபாடு நீடித்து வரும் நிலையில், இருவரும் தங்களுக்குத்தான் கட்சி சொந்தம் என சொல்லி வருகின்றனர்.

ஆனால் உண்மையான பா.ம.க. நாங்கள்தான் என கூறி வந்த அன்புமணி, வருகிற தமிழக சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கிறார். அவருக்கே மாம்பழம் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. கட்சி மற்றும் சின்னத்தை மீட்க ராமதாஸ் போராடினார். ஆனால் அவரது முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.

இதனால் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வாக சசிகலாவின் அ.இ.பு.த.ம.மு.க.வுடன் ராமதாஸ் கூட்டணி அமைத்தார். அந்த கூட்டணிக்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்ட நிலையில், சசிகலா பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து அனல் பறக்க பிரசாரம் செய்து வந்தார். தொடர்ந்து கடந்த 12-ந்தேதி முதல் ராமதாசும் பிரசாரத்தை தொடங்கினார்.

அதன்படி, சேலம் மாவட்டம் பள்ளப்பட்டியில் பிரசாரத்தை முடித்து விட்டு இறங்கியபோது ராமதாஸ் மயக்கமடைந்தார். உடனடியாக அவரை சேலம், குரங்குச்சாவடி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து சென்னையில் அப்போலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ராமதாஸ் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், பிரசாரத்திற்கு செல்ல முடியாத சூழலில், ராமதாஸ் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது;-

“தற்போதைய தேர்தலில் போட்டியிடும் அன்புமணி தலைமையிலான அணி, மக்கள் சேவைக்காக அன்றி, அதிகாரம் கிடைத்தால் அதன் மூலம் பணம் சம்பாதிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. நான் வளர்த்தெடுத்த பிள்ளைகள் இன்று பணத்திற்காக அணி மாறி, கொள்கையற்ற துரோக கூட்டத்தில் இணைந்திருப்பது வருத்தமளிக்கிறது. அதிகாரம் இருந்தால்தான் சேவை செய்ய முடியும் என்பது உண்மை, ஆனால் இவர்கள் அந்த அதிகாரத்தைப் பணமாக்கும் கலைக்காகவே பயன்படுத்த நினைக்கிறார்கள்.

மக்களின் குறைகளை நாடாளுமன்றத்திலோ, சட்டமன்றத்திலோ எதிரொலிக்க வேண்டும் என்பதே நான் அளித்த பயிற்சி. ஆனால், அன்புமணி இந்தியாவிலேயே மிகக் குறைந்த நாட்களே நாடாளுமன்ற அவைகளுக்குச் சென்றவர் என்ற பதிவை வைத்துள்ளார். நேரடி மக்கள் களத்தைக் காண அஞ்சி, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் தனது மனைவியை நிறுத்திவிட்டு, இவர் பின்னணியில் இருந்து கொண்டு அதிகாரத்தைத் தேடுகிறார்.

அரசியல் ரீதியாக மட்டுமின்றி, தனிப்பட்ட ரீதியிலும் அன்புமணி நாகரிகமற்ற முறையில் நடந்துகொண்டுள்ளார். பிறந்தநாள், திருமண நாள் போன்ற முக்கிய தருணங்களில் கூட ஒரு மகனாக தன் கடமையை செய்யாதவர் அவர். குறிப்பாக, அண்மையில் நான் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சேலம் மருத்துவமனையில் உயிருக்குப்போராடிய நிலையில், ஒரு வார்த்தை கூட நலம் விசாரிக்க வராதவர் அன்புமணி.

இது அவரது குணாதிசயத்தையும், துரோக மனப்பான்மையையும் வெளிப்படுத்துகிறது. அன்புமணியின் தலைமையிலான இந்த கும்பல் போட்டியிடும் 18 தொகுதிகளிலும் வாக்காளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இவர்கள் சட்டமன்றத்திற்குச் சென்றால் மக்களின் பிரச்சினைகளுக்காக பேசப்போவதில்லை; மாறாகத் தங்களுக்குத் தெரிந்த பணம் பண்ணும் வித்தையைத்தான் காட்டப்போகிறார்கள். எனவே, வாக்காளர் பெருமக்கள் இந்த துரோக கும்பலை நிராகரித்து, உண்மையாக உங்களுக்குச் சேவை செய்யும் நல்லவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com