

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலுக்குப்பின் மாநில அரசியல் களம் பல்வேறு அதிரடி மாற்றங்களை சந்தித்து வருகிறது. தேர்தலில் த.வெ.க. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில் காங்கிரஸ் உள்பட பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.
அதேவேளை, த.வெ.க. அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது த.வெ.க.வுக்கு ஆதரவாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 25 பேர் வாக்களித்தனர். இதனால் அ.தி.மு.க.வில் குழப்பம் ஏற்பட்டது. மேலும், அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் பலரும் அக்கட்சியில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்த வண்ணம் உள்ளனர்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் பலரும் த.வெ.க.வில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக, நேற்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் த.வெ.க.வில் இணைந்தனர். இந்த நிகழ்வு அ.தி.மு.க.வுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில், அ.தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் வளர்ச்சி, அடுத்தகட்ட செயல்பாடு, கள நிலவரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி வெற்றி பெற்றாக வேண்டும். எல்லோருக்கும் உரிய பங்களிப்புடன், உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும். கட்சியில் இருந்து விலகிச் செல்பவர்கள் போகட்டும். தொண்டர்கள் இருக்கும் கட்சி அதிமுக. அவர்கள் நமக்கு பக்கபலமாக இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.