விமான நிலையமும் வேண்டும்.. விவசாய நிலமும் வேண்டும் - அமைச்சர் ராஜ்மோகன்

இந்தியாவுக்குள் ஒரு இந்தியாவையே பரந்தூர் மக்கள் உருவாக்கியிருந்தார்கள் என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.
அமைச்சர் ராஜ்மோகன்
Published on

சென்னை,

தமிழ் தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனாரின் 143-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை எழும்பூரில் உள்ள தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவப் படத்திற்குப் பள்ளிக்கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதன்பின்னர் அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

பரந்தூரில் 1,000 ஆண்டுகளுக்கும் மேலான தொன்மை கொண்ட தொல்லியல் பொக்கிஷமான கம்பன் கால்வாய் உள்ளது. அங்கிருந்துதான் கடைமடை ஏரிகளுக்குத் தண்ணீர் வருகிறது. அவ்வாறு தண்ணீர் வருவதால், பல்லாயிரக்கணக்கான பறவைகளும் புள்ளினங்களும் அங்கு வந்து இனப்பெருக்கம் செய்கின்றன. இது தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமல்ல; ஒரு சுற்றுச்சூழல் சங்கிலியாகவும் உள்ளது.

இவை அனைத்தையும் கடந்து, 1,000 நாட்களுக்கும் மேலாக அங்கு மக்கள் போராடி வந்தார்கள். இந்தியாவுக்குள் ஒரு இந்தியாவையே உருவாக்கியிருந்தார்கள். ஆதார் அட்டை காட்டினால்தான் உள்ளே அனுமதி என்ற நிலை இருந்தது. அந்தச் சூழல் தற்போது மாறியுள்ளது. விவசாயிகளிடமிருந்து நிலத்தைப் பறிப்பது, குழந்தையிடமிருந்து தாயைப் பிரிப்பதற்கு சமம். நமக்கு விமான நிலையமும் வேண்டும்; விவசாய நிலமும் வேண்டும். இதற்காகத்தான் சொன்னதை செய்தார் முதல்-அமைச்சர் விஜய்.

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதற்காக விவசாய மக்கள் முதல்-அமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்தார்கள். பரந்தூர் விமான நிலையத்திற்காக நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு அந்த நிலத்தை மீண்டும் வழங்குவது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசிக்க வேண்டியுள்ளது. அந்த நிலத்தில் மீண்டும் விவசாயம் செய்ய முடியுமா என்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்த பிறகே முடிவு எடுக்க முடியும். ஆலோசனைக்குப் பிறகு, விவசாயிகளுக்கு சாதகமாக முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com