‘வெள்ளத்தில் இருந்து உயிரை காப்பாற்ற ஓடினோம்’-நேபாளத்தில் இருந்து சென்னை திரும்பியவர்கள் பேட்டி

‘வெள்ளத்தில் இருந்து உயிரை காப்பாற்ற ஓடினோம்’-நேபாளத்தில் இருந்து சென்னை திரும்பியவர்கள் பேட்டி
Published on

நேபாளம்-திபெத் எல்லையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்டு சென்னை திரும்பிய தமிழகத்தை சேர்ந்தவர்கள், 'சுனாமி போல் வந்த வெள்ளத்தில் இருந்து உயிரை காப்பாற்ற ஓடினோம்' என தாங்கள் உயிர் தப்பிய அனுபவத்தை உருக்கமாக தெரிவித்தனர்.

செல்போனில் வீடியோ

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரை சேர்ந்த சத்யா கூறியதாவது:- கைலாஷ் யாத்திரைக்காக சென்னை,மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 57 பேர் சென்றிருந்தோம். புனித பயணமாக சென்ற நாங்கள் சீனாவில் இருந்தபோது சம்பவத்தன்று காலை 8 மணியளவில் சோதனை நடைபெற்றது. நாங்கள் 3 பஸ்களில் பயணம் செய்து கொண்டிருந்தோம். பஸ்சில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஏதோ புழுதி கிளம்புவது போல் தெரிந்தது. அதை நாங்கள் செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டிருந் தோம். ஆனால், சிறிது நேரத்தில் அது சுனாமி போல் பிரமாண்டமாக எழுந்து வந்தது. அதன் தாக்கம் எங்களுக்கு உடனடியாக தெரியவில்லை. நாங்கள் சாதாரணமாகத்தான் இருந்தோம். வெள்ளம் வேகமாக வருவதை பார்த்ததும் அங்கிருந்த அனைவரும் ஓட ஆரம்பித்தனர். அதன் பிறகுதான் நாங்களும் பஸ்சில் இருந்து இறங்கி உயிரைக் காப்பாற்ற ஓடினோம்.

தமிழக அரசு உதவி

நேபாளத்தில் எங்களை மீட்புக்குழுவினர் மீட்டு உதவி செய்தனர். சுமார் 3 மணி நேரம் மரங்களை பிடித்தபடியே நடந்து சென்றோம். அந்த நேரத்தில் எங்களது கைகள் முழுவதும் முட்கள் குத்தி காயமடைந்தன. தமிழ்நாடு அரசு எங்களுக்கு அளித்த உதவி மிகப்பெரியது. தங்கத்தட்டில் வைத்து காப்பாற்றி அழைத்து வந்தது போல் தமிழக அரசு எங்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வந்துள்ளது. அந்த அளவுக்கு தமிழக அரசு எங்களுக்கு உதவி செய்துள்ளது. இவ்வாறு சத்யா கூறினார்.

4 அமைச்சர்கள் டெல்லியில் முகாம்

இதுகுறித்து அமைச்சர் ஆனந்த் கூறியதாவது:- அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், தென்னரசு, வினோத் உள்ளிட்ட 4 அமைச்சர்கள் டெல்லியில் முகாமிட்டு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை கண்காணித்து வருகின்றனர். அவர்கள் டெல்லியில் இருந்து உடனுக்குடன் முதல்-அமைச்சர் விஜய்க்கு தகவல்களை தெரிவித்தனர். முதல்-அமைச்சரும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக செய்யுமாறு அறிவுறுத்தி னார். 4 அமைச்சர்களும் டெல்லியில் முகாமிட்டு இருப்பதால், அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.அனைத்து பணிகளும் விரைவாக நடைபெற்று வருகின்றன. வெள்ளத்தில் சிக்கியுள்ள அனைவரும் நலமுடன் தாயகம் திரும்புவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்று அமைச்சர் ஆனந்த் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com