

சிவகங்கையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்துக்கு பிடித்த சாபக்கேடாக தவெக ஆட்சி அமைந்துள்ளது. எவ்வளவு சீக்கிரம் இந்த ஆட்சியை மக்கள் கொடுத்தார்களோ, அவ்வளவு சீக்கிரம் இந்த ஆட்சி வீழும்.அதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்யவைத்து, அவர்களுக்கு ஆசைகாட்டி வாக்குகளை பெற்று ஆட்சியமைத்ததை மறைப்பதற்காகவே அதிமுக - திமுக கூட்டணி அமைக்க முயற்சித்ததாக கூறினார்கள்.தேர்தல் முடிந்தவுடன் தவெகவுக்கு பெரும்பான்மை இல்லாத சூழலில், விசிக, கம்யூனிஸ்ட்டுகள் இல்லாமல் அவர்களால் ஆட்சி அமைக்க முடியாத நிலைமை இருந்தது. எனவே, தவெகவால் ஆட்சி அமைக்க முடியாத பட்சத்தில், நீங்கள் நேர்மையாக அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என தவெகவுக்கு நான் கோரிக்கை வைத்தேன்.
தவெகவால் ஆட்சியமைக்க முடியாத பட்சத்தில், பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைக்க முயற்சித்தது உண்மை. அதற்கு தவெகவிடம் ஆதரவு கேட்கவே முடிவு செய்தோம், திமுகவிடம் ஆதரவு கேட்கவில்லை. அப்போது பாஜக கூட்டணியில் உள்ள அதிமுகவுக்கு ஆதரவளிக்க கம்யூனிஸ்டுகள் தயங்கினார்கள். எனவே, திருமாவளவனை முதல் அமைச்சராக்க எடப்பாடி பழனிசாமி உட்பட நாங்கள் அனைவரும் முயற்சித்தோம்.
தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப் படைக்கே பாதுகாப்பு கொடுக்க வேண்டிய நிலைமைதான் உள்ளது. திராவிட கட்சிகளுக்கு மாற்றாக கொண்டுவர வேண்டும் என்பதற்காக பெரும் ஆபத்தான ஆட்சியை தமிழகத்துக்கு மக்கள் கொடுத்துள்ளனர். வெறும் சினிமா மாயையை நம்பி மக்கள் வாக்களித்துள்ளனர். நிழலில் ஹீரோவாக இருந்தவர், நிஜத்தில் வில்லனாக உருமாறி வருகிறார் என்றார்.