தமிழக அரசின் தனித் தீர்மானத்தை முழு மனதோடு வரவேற்கிறோம் - சசிகலா

தமிழகத்தின் ஜீவாதார உரிமை பறிபோனால் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம்கேள்விக்குறியாகிவிடும்.
சசிகலா
Published on

சென்னை,

அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் சசிகலா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

கர்நாடக மாநிலம் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தனித்தீர்மானத்தை முழு மனதோடு வரவேற்கிறோம். தமிழக விவசாயிகளின் நலனுக்கு முற்றிலும் விரோதமாக செயல்படுகின்ற காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசுக்கு எனது கடும் கண்டனத்தை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். இது இரு மாநிலத்தில் உள்ள மக்களின் ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் சீர்குலைக்கும் செயல். தமிழகத்தின் ஜீவாதார உரிமை பறிபோனால் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம்கேள்விக்குறியாகிவிடும். குறிப்பாக, டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும் என்பதையும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

வடிகால் மாநிலம்

பூகோள ரீதியாக தமிழகம் வடிகால் மாநிலமாக அமைந்துவிட்டது. இந்த நிலையில் கர்நாடகா, கேரளா போன்ற மேல் பகுதியில் அமைந்துள்ள மாநிலங்கள் புதிய அணைகளை கட்டுவதன் மூலம், தமிழகத்தில் வடிகின்ற நீரை தடுப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகின்றனர். தமிழகத்தில் வடிகின்ற நீரை தடுக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. இது போன்ற நடவடிக்கைகள் இயற்கை நீதிக்கு முற்றிலும் எதிரானது. வடிகால் மாநிலங்களுக்கு உரிய சட்டப்பாதுகாப்பு உச்சநீதிமன்றத்தால் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் இறுதி தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, வடிகால் மாநிலமாக அமைந்துள்ள தமிழகத்தின் அனுமதியின்றி மேகதாது அணையை கட்ட முடியாது. எனவே சட்டப்போராட்டங்களின் வழியாக தமிழகத்திற்கு கிடைத்த பாதுகாப்பை காப்பாற்ற வேண்டியது மத்திய அரசின் கடமை. எனவே, கர்நாடக அரசு தனது இஷ்டத்திற்கு செயல்படமுடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

காவிரி நதி நீர் பிரச்னையில் தமிழகத்திற்கு தேவையான சட்டப்பாதுகாப்பை பெற்றுத்தந்ததோடு தமிழக விவசாயத்தையும் அழிந்திடாமல் காப்பாற்றியது புரட்சித்தலைவி அம்மா தான் என்பதை இந்நேரத்தில் பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்திய அரசிதழ்

புரட்சித்தலைவி அம்மாவின் தொடர் முயற்சியால், தமிழகத்துக்கு ஆண்டுக்கு, 205 டி.எம்.சி நீரை கர்நாடகம் தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என காவிரி நதிநீர் தீர்ப்பாயம் இடைக்கால தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதன்படி தமிழகத்திற்கு நீரை பெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் புரட்சித்தலைவி அம்மா மேற்கொண்டார்கள். மேலும், காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை மத்திய அரசிதழில் ஒன்பதாவது அட்டவணையில் வெளியிட செய்தார். அதன்பிறகும், தமிழகத்திற்கு காவிரி நீரை விடுவிக்காத கர்நாடக அரசை கண்டித்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் காவிரி நீரை பெறுவதற்காக காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டார். மேலும், பல்வேறு சட்டப்போராட்டங்களை முன்னெடுத்து காவிரி நீரை தமிழகத்திற்கு பெற்று தர வேண்டும் என தனது இறுதிமூச்சு உள்ள வரை தொடர்ந்து போராடினார். கடந்த 2016-ஆம் ஆண்டு புரட்சித்தலைவி அம்மா தனது உடல்நிலை சரியில்லாமல் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நேரத்தில் கூட, தமிழக அரசு அதிகாரிகளை மருத்துவமனைக்கே நேரில் வரவழைத்து காவிரி நதி நீரை பெறுவதற்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார்கள்.

புரட்சித்தலைவி அம்மா தொடர்ந்து மேற்கொண்ட நீண்ட கால சட்டப் போராட்டத்தின் பயனாக, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையமும், காவிரி ஒழுங்காற்றுக்குழுவும் அமைக்க கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 16-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இத்தகைய சூழலில் கர்நாடக அரசு எந்தவித கட்டுப்பாடுமின்றி தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. கர்நாடக அரசு தமிழ்நாட்டின் அனுமதியை பெறாமல் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணையை கட்ட இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

குறுவை சாகுபடி பாதிப்பு

மேலும், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி பாசனத்திற்காக திறக்கவேண்டிய நீர் மேட்டூர் அணையிலிருந்து இன்னும் திறக்கப்படாமல் இருக்கும் சூழ்நிலையில், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி மிகவும் பாதிப்பு அடைந்து வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு காவிரி நீரை நம்பித்தான் கடைமடை பகுதி விவசாயிகள் காத்துக்கொண்டு இருக்கின்றனர். எனவே, காவிரியிலிருந்து தமிழகத்திற்கு விடுவிக்க வேண்டிய நீரின் அளவை முழுமையாக பெறுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி கூட்டணியோடு புதியதாக அமைந்துள்ள தவெக அரசு, கர்நாடகா காங்கிரஸ் அரசின் எந்தவித சமரசத்திற்கும் உடன்படாமல், தமிழக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட துடிக்கும் கர்நாடக அரசின் அனைத்து முயற்சிகளையும் முறியடிக்கவேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com