மிகப்பெரிய வெற்றியை இடைத்தேர்தலில் பெறுவோம் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

ஒரு ரீல்ஸ் ஆட்சியை இந்த முதல்-அமைச்சர் நடத்திக் கொண்டிருக்கிறார் என இளைஞர் அணி கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
Published on

சென்னை,

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை நாம் பெறுவோம் என இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

நம் தயவில்...

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பணிகள் குறித்து, தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்றது. இதில், தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது:-

மதுராந்தகத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் ஆளுங்கட்சியிடம் விலைபோன காரணத்தினால், இன்றைக்கு இடைத்தேர்தல் வந்துள்ளது. தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை கூறி மக்களிடத்தில் சென்று வாக்கு பெற்று வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களின் உதவியால்தான் இன்றைக்கு இந்த ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் நம் தயவில்தான் இன்றைக்கு இந்த ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாம் கொண்டுவந்த திட்டங்களின் மீது 'ஸ்டிக்கர்' ஒட்டி, பெயரை மாற்றித் திட்டத்தை மாற்றி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு ஒரு ரீல்ஸ் ஆட்சி'யை இந்த முதல்-அமைச்சர் நடத்திக் கொண்டிருக்கிறார்.

தோற்றுவிடக்கூடாது

இந்த ஆட்சியை நாம் தொடர விடலாமா? இந்த ஆட்சிக்கு நாம் கொடுக்கப்போகின்ற முதல் அடி, இந்த இடைத்தேர்தலில் தாராபுரத்திலும், மதுராந்தகத்திலும் மிகப்பெரிய வெற்றியை நாம் பெற்றாக வேண்டும். அதை நிச்சயம் செய்து காட்ட வேண்டும். 120 நாட்களில் மட்டும் ரூ.40 ஆயிரம் கோடி கடன் வாங்கியிருக்கிறார்கள். நாம் தவறு செய்துவிட்டோம், தி.மு.க.வை இழந்துவிட்டோம் என்று மக்கள் இன்றைக்கு உணரத் தொடங்கியிருக்கிறார்கள். கடந்த சட்ட மன்றத்தேர்தலில் நாம் வெற்றி வாய்ப்பை இழந்தோம். எனவே, ஒவ்வொரு வீட்டிலும், ஒவ் வொரு வாக்காளரையும் சந்தித்துப் பேசுங்கள். இந்த இடைத்தேர்தல் வெற்றிதான் அடுத்து மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கையை கொடுக்கப்போகின்ற வெற்றி. நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்களிடம் மீண்டும் நாம் தோற்றுவிடக்கூடாது. மிகப்பெரிய வெற்றியை இந்த இடைத்தேர்தலில் பெறுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, ரகுபதி, தா.மோ.அன்பரசன், காஞ்சீபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் சுந்தர், இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் எஸ்.ஜோயல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com